ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “கருப்பு’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
படத்தில் த்ரிஷா, நட்டி, ஸ்வாசிகா என முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். முன்னதாக இந்தப் படத்தில் தானும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்ததாகவும், ஆனால் அந்தக் காட்சிகள் எடிட்டிங்கில் கட் ஆகி விட்டதாகவும் நம்மிடம் வருத்தப் பட்டிருந்தார் சின்னத்திரை நடிகை ஆனந்தி. இது தொடர்பாக அவர் நம்மிடம் பேசிய போது.
‘காளி வெங்கட்டும் நானும் நடிச்சிருந்தோம். அவருக்கு ஜோடியா நடிச்சிருந்தேன். ஆனா கொஞ்ச நாள் முன்னாடி படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சாரை ஒரு நிகழ்ச்சியில சந்திச்சேன். அப்ப அவர்கிட்ட பேசினப்ப, படத்துல நிறைய காட்சிகள் எடிட்ல போயிடுச்சு. நீங்க பண்ணின காட்சிகள்கூட வரும்னு சொல்ல முடியாது’ன்னு சொன்னார்.
சினிமாவுல இது சகஜமானதுதான். பெரிய நடிகர்களுடைய படங்களில் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்க முடியாது. நேர்மையாக சம்பந்தப்பட்டவர்கள்கிட்ட கூப்பிட்டுச் சொல்லிடுறாங்களே, அதுவே பெரிய விஷயம். சிலர் சொல்லவே மாட்டாங்க. நாம நடிச்சுட்டு படத்துல இருக்கோமா இல்லையாங்கிறதை முதல் நாள் தியேட்டர் போய் ஒரு தவிப்போட பார்க்க வேண்டிய நிலைமையெல்லாம் இங்க நிறைய பேருக்கு வந்திருக்கு’ எனப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது படத்தில் சில நிமிடங்கள் ஆனந்தி வந்து போகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறித்து அவரிடம் கேட்டோம்.
‘எனக்குமே சிலர் போன் பண்ணிச் சொன்னாங்க. ஆனா இன்னும் படம் பார்க்கல. நான் நடிச்ச காட்சிகள் இருக்காதுங்கிற வெறுப்புலதான் படத்துல நடிச்சதையே மறந்துட்டு லீவுக்கு சொந்த ஊர் போயிட்டேன். ஆனா நாலு பேர் பார்த்து அடையாளம் கண்டுபிடிக்கிற அளவுக்கு படத்துல நான் பதிவாகியிருக்கேன்னு நினைக்கிறப்ப கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. படக்குழுவினருக்கு நன்றி’ என்கிறார் இவர்.