கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அச்சிறுமியை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கடத்தி சென்றதாக தெரியவந்தது. இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்நிலையி்ல் நேற்று கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக சூலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதில் தேடப்பட்டு வந்த சிறுமி, சடலமாக கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

இதனிடையே சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிறுமியின் முகம் உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதாகவும் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும், பெற்றோரும் சூலூர் காவல் நிலைய வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு 9:30 மணி அளவில் துவங்கிய மறியல், அதிகாலை 5 மணி வரை விடிய விடிய நடைபெற்றது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. ரம்ய பாரதி, சூலூர் எம்.எல்.ஏ.சுகுமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இந்த நிலையில் சிறுமி கொலை தொடர்பாக அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்துக்குரிய கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கார்த்தி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கார்த்திக் மற்றும் அவருக்கு உதவியதாக மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கார்த்தி காவல் துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒரு கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தாக கூறப்படுகிறது. இதில் வலது கை மற்றும் கால் முறிவு ஏற்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.