Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

Spread the love

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்தோம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்த நிலையில், கள ஆய்வு குழுவை அமைத்தார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின். சட்டமன்றத் தொகுதிவாரியாகப் பயணித்து தி.மு.க தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து, அவர்கள் சொன்ன கருத்துகளைத் தொகுத்து அறிக்கைகளாகத் தயார் செய்து, பெரிய பெரிய பெட்டிகளில் வைத்து தலைமையிடம் சமர்ப்பித்தனர் கள ஆய்வுக்குழுவினர்.

பிறகு, ‘மறுசீரமைப்புக் குழு’ ஒன்றை அமைத்து இறுதி அறிக்கை தயார் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.

திமுக - உதயநிதி ஸ்டாலின்
திமுக – உதயநிதி ஸ்டாலின்

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ”பொதுச்செயலாளர் மாற்றப்பட்டு தலைமைக் கழக நிர்வாகிகளில் இளைஞர்கள் இடம்பெற வேண்டும்; மேலும் குறுநில மன்னர்களாகத் திகழும் மண்டலப் பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு, இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ முறையைக் கொண்டுவர வேண்டும்; உதயநிதி கட்சியை வழிநடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் உள்ளடக்கிய ஃபைலை தி.மு.க தலைவரிடம் சமர்பிக்கவுள்ளனர் ஆய்வு குழுவினர்.

ஆகஸ்ட் 5-ம் தேதி இறுதி அறிக்கை தரப்பட்டு செப்டம்பரில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவுக்குப் பிறகு தி.மு.க அதிரடி மாற்றங்கள் நிகழப் போகின்றன. இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டு, கட்சி தலைமைப் பொறுப்புகளுக்கு நகர விரும்புகிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.

உதயநிதி, கனிமொழி
உதயநிதி, கனிமொழி

செயல் தலைவராகவோ, முதன்மைச் செயலாளராகவோ, பொருளாளராகவோ அவரை நியமிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த மாற்றங்கள் குறித்து துணை பொதுச் செயலாளர் கனிமொழியுடன் உதயநிதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்” என்றனர்

இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் ஒதுங்கிக் கொண்டால், அடுத்த இளைஞரணிச் செயலாளர் யார் என்ற பரபரப்பு அறிவாலயத்தை பற்றிக் கொண்டிருக்கிறது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *