Vinayagar Chaturthi Special: மண் பிள்ளையார் வழிபாடு ஏன் முக்கியம்? – Kumudam

Spread the love

வி.ராம்ஜி

விநாயக சதுர்த்தி நன்னாளில், வீட்டில் பிள்ளையார் படங்களும் சிலைகளும் எவ்வளவு இருந்தாலும் மண் பிள்ளையார் வைத்து பூஜிப்பதுதான் உகந்தது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பிள்ளையார் சதுர்த்தியன்று, அதிகாலையில் எழுந்து குளித்துவிடவேண்டும். முன்னதாக வீட்டை நன்றாகச் சுத்தம் செய்யவேண்டும். வாசலில் மாவிலையைத் தோரணமாகக் கட்ட வேண்டும். மாவிலை என்பது மகாலக்ஷ்மியின் அம்சம்! இதேபோல், பூஜையறையை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். முந்தைய நாளிலேயே, விளக்கு, ஊதுபத்தி ஸ்டாண்ட் முதலானவற்றை நன்றாகக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூஜையறையில், நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மணையில் கோலமிட்டுக் கொள்ளவேண்டும். கோலத்தின் மேல் இலையை வைத்துக் கொள்ளலாம். இலையின் நுனியை வடக்குப் பார்த்தபடி வைப்பது சிறப்பு. அந்த இலையின் மேல் பச்சரிசியை பரப்பி வைக்கவேண்டும். இந்த பச்சரிசிக்கு நடுவே, களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வைக்கவேண்டும். பிள்ளையாருக்கு இப்போது குடைகள் விற்கின்றன.

அந்த பேப்பர் குடைகளை வைத்து அழகுப்படுத்திக்கொள்ளலாம். விதம்விதமாக, ரகம்ரகமாக பிள்ளையார் சிலைகள் பல வண்ணங்களில் இருக்கும் போது, , களிமண் பிள்ளையார் எதற்காக என்கிற கேள்வி நியாயம்தான்!

பூமியில் இருந்து கிடைத்தது அனைத்தும் பூமிக்கே செல்லவேண்டும் என்கிறது சாஸ்திரம். மனிதப் பிறப்பும் அப்படித்தான்! இவற்றை உணர்த்துவதற்காகத்தான் களிமண் பிள்ளையார் வழிபாடு செய்யப்படுகிறது.

பிறகு பிள்ளையாருக்கு பல வகையான மலர்கள் சூட்டி அழகுப்படுத்தலாம். பலவகைப் பூக்கள் கொண்ட கதம்பம், வெள்ளெருக்கம்பூ, அருகம்புல், மல்லிகைப்பூ, சாமந்திப்பூ என பல வகைப் பூக்களால் அலங்கரிக்கலாம். ‘அதற்கெல்லாம் வசதி எங்கே? அதுவும் பண்டிகை காலத்துலதான் பூ விலை, தங்கம் விலையாட்டம் எகிறுது’ என்று கலங்கத்தேவையில்லை. இருக்கவே இருக்கிறது அருகம்புல். அதை அப்படியே மாலையாக்கி, விநாயகருக்கு சார்த்தலாம். சொல்லப்போனால்,  அருகம்புல் சார்த்துவதுதான் விசேஷம்!

பிள்ளையாருக்கு எவற்றையெல்லாம் நைவேத்தியமாகப் படைக்கலாம்? 

நைவேத்தியம் செய்ய பல வகையான பழங்களை வைத்துக்கொள்ளவேண்டும். பழங்களுக்கு அடுத்ததாக, விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகத்தை, கொழுக்கட்டையை சமைத்து நைவேத்தியமாக வைக்கலாம். தேங்காய், வெல்லச்சூரணம் கொண்டு ஒரு கொழுக்கட்டை. இன்னொன்று காரக் கொழுக்கட்டை அதாவது. உப்புக்கொழுக்கட்டை அதாவது பருப்புக் கொழுக்கட்டை வைத்து படையலிடுவது மிக மிக அவசியம்!

விநாயகர் துதி பாடலாம். அவரின் திருநாமங்களைச் சொல்லி வணங்கலாம். விநாயகர் அகவல் பாராயணம் செய்து எல்லாவற்றையும் விட மேலானது. உலக நன்மைக்காக, விநாயகர் அகவல் பாராயணம் செய்கிறவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அதிகாலையில் எழுந்து, உணவு ஏதும் எடுத்துக்கொள்ளாமல், பூஜைகளை முடித்து, பிறகு சாப்பிட்டு,விரதத்தை நிறைவு செய்யலாம்.

பிள்ளையாரப்பா… உன் திருவடி சரணம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *