கேரளாவின் இஸ்லாமிய மதகுருவான கிராண்ட் முஃப்தி ஷேக் அபுபக்கர் அஹ்மத், கொச்சியில் நடந்த ஒரு இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், “பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
கொச்சியில் நடைபெற்ற ஹப்புல் ரசூல் முஸ்லிம் மாநாட்டில் பேசிய மதகுரு அபுபக்கர், “‘பெண்கள் தங்க ஆபரணங்களை போன்றவர்கள். எனவே பெண்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். பொது வெளியில் நுழையக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இது பெண்களை குறைக்கும் நோக்கம் கிடையாது. அவர்களை கவுரவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தான். உதாரணமாக, நகைக் கடையில் ஒரு நபர் தங்க நகையை வாங்கியதை மேற்கோள் காட்டி பேசினார். ஒருவர் நெக்லஸ் வாங்க கடைக்கு சென்றால், நெக்லஸ் ஒரு அலமாரியில் இருந்து கவனமாக வெளியே எடுக்கப்பட்டு பின்னர் உள்ளே இருக்கும் ஒரு பெட்டியை திறந்து அதில் இருந்து கவனமாக எடுக்கப்பட்டு அது வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படுகிறது” என்றார்.
`பெண் வெளியில் வந்தால் அழிவுக்கு வழிவகுக்கும்’
இதே போன்று பக்கத்து கடையில் கல் கிரைண்டர்களை விற்கும் கடையில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டினார். மக்கள் நடந்து சென்றாலும், கல் மீது கால் வைத்தாலும் சாலையோரம் வைத்துக்கொள்ளலாம்.
தங்க நகையை சாலையோரத்தில் விட்டுச் செல்வதால், அவ்வழியே செல்லும் அனைவரும் அதைத் தொடக்கூடும். இறுதியில் அதன் அழகையும் மதிப்பையும் அழித்துவிடும். எனவே நகையை அதன் அழகை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதை ஒரு பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பெண்களை இப்படி பொது வெளியில் கொண்டு வந்தால் அது பெரும் அழிவுக்கு வழிவகுக்கும்.