WWE பாணி அராஜகம்.. பாலை அடிக்காமல் ஆளை அடித்த அர்ஜென்டினா! பொறுமையால் வென்ற ஸ்பெயின் | WWE-Style play from Argentina: How did Spain show the composure in the 2026 World Cup

Spread the love

Sports

oi-Shyamsundar I

நியூயார்க்: மெட்லைஃப் மைதானத்தில் நேற்று நடந்த 2026 ஃபீஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி, வரலாற்றில் ஒரு மறக்க முடியாத ஆட்டமாக மாறியுள்ளது. முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவும், ஸ்பெயின் அணியும் மோதிய இந்த ஆட்டம், கால்பந்து மைதானத்தை விட ஒரு WWE மல்யுத்த ரிங்கைத்தான் அதிகம் நினைவூட்டியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அர்ஜென்டினா அணி கடுமையான உடல் ரீதியான தாக்குதல்களை கையில் எடுத்தது. ஸ்பெயின் வீரர்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவர்களை முரட்டுத்தனமாக இடித்து தள்ளுவது, சட்டையை பிடித்து இழுப்பது என அர்ஜென்டினா வீரர்கள் முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, லிசாண்ட்ரோ மார்டினெஸ், லியான்ட்ரோ பரேடஸ் மற்றும் கிறிஸ்டியன் ரொமேரோ ஆகியோர் நடுவரின் கண் முன்னாலேயே ஸ்பெயின் வீரர்களை தாக்கி மஞ்சள் அட்டைகளைப் பெற்றனர்.

WWE-Style play from Argentina How did Spain show the composure in the 2026 World Cup

இருப்பினும், அர்ஜென்டினாவின் இந்த ரவுடித்தனமான அப்ரோச்சை கண்டு ஸ்பெயின் அணி சற்றும் பதற்றமடையவில்லை.

அர்ஜென்டினாவின் ஒவ்வொரு முரட்டு அடியையும் புன்னகையுடனும், புத்தர் போல நிதானத்துடனும் எதிர்கொண்டது. பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த ஸ்பெயின், பாசிங் கேமில் கவனம் செலுத்தி அர்ஜென்டினாவை ஓடவிட்டது.

65 சதவீதத்திற்கும் மேலாக பந்தை தன் வசம் வைத்திருந்த ஸ்பெயின், அர்ஜென்டினாவின் மோசமான ஆட்டத்திற்கு தங்களின் கிளாஸ் ஆட்டத்தின் மூலமே பதிலடி கொடுத்தது.

ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ், ஸ்பெயின் இளம் டிஃபெண்டர் பாவ் குபார்சியை மிக மோசமான முறையில் கீழே தள்ளி இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

இதனால் அர்ஜென்டினா 10 வீரர்களாக குறைந்தது. 90 நிமிடங்கள் முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.

கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் அடித்த ஒரு கோல் நடுவரால் மறுக்கப்பட்டாலும், அவர்கள் தங்களின் பொறுமையை இழக்கவில்லை. நடுவரிடம் சண்டைக்கு செல்லவில்லை.

இறுதியாக ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில், நிக்கோ வில்லியம்ஸ் கொடுத்த அற்புதமான அசிஸ்ட்டை, மாற்று வீரராக களம் புகுந்த பெரான் டோரஸ் கோலாக மாற்றினார்.

மைதானமே அதிரும் வகையில் ஸ்பெயின் ரசிகர்கள் இந்த வரலாற்று கோலை கொண்டாடினர்.

கோலை இழந்த பின் அர்ஜென்டினாவின் ஆக்ரோஷம் எல்லை மீறியது. ஆட்டத்தின் இறுதி விசிலுக்குப் பிறகு, அர்ஜென்டினாவின் லியான்ட்ரோ பரேடஸ் ஸ்பெயின் வீரர்களின் தொண்டையைப் பிடித்து தள்ளியதால் அவருக்கு நேரடியாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

அர்ஜென்டினா வீரர்கள் இத்தனை அராஜகங்களை செய்த போதிலும், கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி எந்தவொரு சண்டைக்கும் செல்லாமல், அர்ஜென்டினா வீரர்களுக்கு கைகொடுத்து தங்களின் நிதானத்தையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்தினர்.

லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை கனவை உடைத்து, முரட்டுத்தனத்தை தனது பொறுமையான ஆட்டத்தால் வீழ்த்தி, 2010க்கு பின் தங்களின் இரண்டாவது உலகக்கோப்பை மகுடத்தை சூடியுள்ளது ஸ்பெயின்!

கால்பந்து உலகில் ‘கிளாஸ்’ எப்போதும் ‘மாஸ்’ என்பதை ஸ்பெயின் மீண்டும் நிரூபித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *