அத்தியாயம் 2
1926, டிசம்பர் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு, இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அகதா இருந்தார். கணவர் ஆர்ச்சி, தனது காதலி நான்சி நீலுடன் வார இறுதியைக் கழிக்க நண்பர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தார். இரவு சுமார் 9:30 மணியளவில், தனது 7 வயது மகள் ரோசலிண்டிற்கு முத்தமிட்டு விடைபெற்ற அகதா, தனது காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
மறுநாள் காலை, சர்ரே பகுதியில் உள்ள ‘நியூலேண்ட்ஸ் கார்னர்’ என்ற இடத்தில், ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கின் விளிம்பில் அகதாவின் கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
காரின் முகப்பு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. உள்ளே அகதாவின் ஃபர் கோட், சூட்கேஸ் மற்றும் காலாவதியான ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருந்தன. ஆனால், அகதா கிறிஸ்டியை மட்டும் காணவில்லை!

அத்தியாயம் 3
அகதா காணாமல் போன செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அப்போதைய இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் வில்லியம் ஜாயின்சன்-ஹிக்ஸ் நேரடியாகத் தலையிட்டு, காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தார். சுமார் 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 15,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மோப்ப நாய்கள் மற்றும் முதன்முறையாக ஒரு தேடுதல் வேட்டையில் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.
அகதாவின் கணவர் ஆர்ச்சி மீது காவல்துறைக்கும் பத்திரிகைகளுக்கும் பலத்த சந்தேகம் எழுந்தது. காதலியைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆர்ச்சி, அகதாவைக் கொலை செய்து ‘சைலண்ட் பூல்’ எனப்படும் ஆழமான குளத்தில் வீசியிருக்கலாம் என்று பரவலாகப் பேசப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான `ஷெர்லாக் ஹோம்ஸை’ உருவாக்கிய பிரபல எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் (Sir Arthur Conan Doyle), அகதாவின் கையுறை ஒன்றை வைத்து, உயிருடன் இருக்கிறாரா எனக் கண்டறிய முயன்றார்.