போலீஸ் பாதுகாப்பில் இருந்த விசாரணைக் கைதி தப்பியோட்டம்; கவனக்குறைவாக இருந்த 3 போலீஸாரிடம் விசாரணை

Spread the love

தூத்துக்குடி, பனிமய மாதா பேராலயத்தின் பின்புறம் உள்ள தெருவில் வசித்து வருபவர் ராகுல். இவர், தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு அவரது காரை நிறுத்தி வைத்திருந்தார். 

இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்தும், காரில் கட்டப்பட்டிருந்த தவெக கொடியைச் சேதப்படுத்தியும் சென்றுள்ளனர். 

உடைக்கப்பட்ட கார் கண்ணாடி
உடைக்கப்பட்ட கார் கண்ணாடி

இந்த நிலையில், நேற்று காலையில் காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராகுல் மற்றும் குடும்பத்தினர் இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதி சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மீனா கானா தெரு பகுதியைச் சேர்ந்த முகமது தவ்பிக் என்பவரை நேற்று இரவில் தென்பாகம் போலீஸார் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை காவல் நிலையத்திலிருந்து அழைத்து வந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் புறக்காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயம்பெருமாள், தலைமைக் காவலர்கள் வடிவேலு, ஆனந்த் ஆகிய மூவரும் இரவு பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளனர்.  இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் முகமது தவ்பிக் தப்பியோடியுள்ளார்.

போலீஸாரின் விசாரணையில் மூன்று போலீஸாரும் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் தப்பியோடியது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய முகமது தவ்பிக்கை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி புறக்காவல் நிலையம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி புறக்காவல் நிலையம்

பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 3 போலீஸாரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 22-ம் தேதி இதே தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்த வினோத் ராஜா என்பவரும் போலீஸாரின் பாதுகாப்பை மீறி தப்பியோடினார்.

பின்னர், அன்று மாலையே வழக்கறிஞருடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் போலீஸ் காவலில் இருந்த விசாரணைக் கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *