அக்டோபர் மாதம் என்றாலே பண்டிகைகள் அடுத்தடுத்து வரத் தொடங்கிவிடும். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமல்லாமல் வங்கிகளுக்கும் விடுமுறை நாட்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக இந்த மாதத்தில் வங்கிக் கிளைகளுக்குச் சென்று பணப் பரிவர்த்தனை செய்ய இருப்பவர்கள், விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணைப்படி, அக்டோபர் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த 16 நாட்களும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படும் விடுமுறைகள் அல்ல. மாநிலம், நகரம் மற்றும் அங்கு கொண்டாடப்படும் பண்டிகைகளைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மாறுபடும்.
முதலில் இந்த தேதிகளை நினைவில் வையுங்கள்!
அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கி கிளைகள் மூடப்பட்டிருக்கும்.
அக்டோபர் 10-ம் தேதி மகாலய அமாவாசையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
அக்டோபர் 17-ம் தேதி மகா சப்தமி காரணமாக அகர்தலாவில் வங்கி சேவைகள் இருக்காது.
அக்டோபர் 19-ம் தேதி மகா நவமி, ஆயுத பூஜை, துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் வங்கிகள் மூடப்படும். இந்தப் பட்டியலில் சென்னை, கொல்கத்தா, கவுகாத்தி, இம்பால், பாட்னா, ராஞ்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
அக்டோபர் 20-ம் தேதி விஜயதசமி மற்றும் மகா நவமி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு பெரும்பாலான முக்கிய நகரங்களில் வங்கி கிளைகளுக்கு விடுமுறை இருக்கும். அதேபோல், அக்டோபர் 21-ம் தேதியும் சில மாநிலங்களில் துர்கா பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு வங்கிகள் செயல்படாது.
அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் துர்கா பூஜை, தசேன் பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 26-ம் தேதி லட்சுமி பூஜை உள்ளிட்ட காரணங்களால் அகர்தலா, சண்டிகர், ஜம்மு, சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்.
அக்டோபர் 29-ம் தேதி கர்வா சௌத் காரணமாக சிம்லாவிலும், அக்டோபர் 31-ம் தேதி சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு அகமதாபாத்திலும் வங்கி கிளைகள் இயங்காது.
சனி, ஞாயிறு லீவும் உண்டு!
பண்டிகை விடுமுறைகளுடன் வழக்கமான வார விடுமுறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அக்டோபர் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மேலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளான அக்டோபர் 10 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை. இதனால், வங்கியில் நேரடியாகச் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தால் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே முடித்துக்கொள்வது நல்லது.
ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தலாமே!
வங்கிக் கிளைகளுக்கு விடுமுறை என்றாலும் டிஜிட்டல் வங்கி சேவைகள் முழுமையாக முடங்கிவிடும் என்று அர்த்தமில்லை. UPI, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்ற சேவைகளை வழக்கம்போல் பயன்படுத்த முடியும்.
அதேசமயம், லாக்கர் அணுகுதல், சில வகையான பணப் பரிவர்த்தனைகள், காசோலை தொடர்பான பணிகள், ஆவண சரிபார்ப்பு போன்றவற்றுக்கு நேரடியாக வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம்.
எனவே, அக்டோபரில் வங்கிக்குச் செல்லும் முன் உங்கள் பகுதியில் உள்ள குறிப்பிட்ட கிளையின் விடுமுறை நாளை ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இல்லையென்றால்… வங்கிக்குப் போய் வாசலில் லீவு போர்டைப் பார்த்துவிட்டு திரும்ப வேண்டிய நிலை வரலாம்.

