புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு அதே பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்காலில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியின் உடல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யக் கூடாது என்றும், ஜிப்மர் மருத்துவமனையில்தான் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
அதையடுத்து சிறுமியின் உடல், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒன்பது வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த புதுச்சேரியையும் போராட்டக்களமாக மாற்றியது.

முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீஸார், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். எம்.பி கனிமொழி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி ராகுல் காந்தி வரை கண்டனம் தெரிவித்ததால், தேசிய அளவில் கவனம் பெற்றது சிறுமியின் கொடூரக் கொலை.
சிறுமியின் உடற்கூராய்வு நடைபெற்ற ஜிப்மர் மருத்துவமனை தொடங்கி, புதுச்சேரி முழுவதும் தன்னெழுச்சியாக சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்தன. முத்தியால்பேட்டை, கோட்டக்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள், தாங்களாகவே கடைகளை அடைத்தனர்.
கிராமப்புறப் பகுதிகளில் தங்கள் பெண் குழந்தைகளுடன், கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை செல்போன்களில் ஏந்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.