ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் அக்னிபத் திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற நிலை மாறி, இனி மேலும் இரண்டு ஆண்டுகள் சேவையைத் தொடர வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, நிரந்தர ராணுவப் பணியில் சேரவும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபத் திட்டத்தின் கீழ், 17.5 முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் அக்னி வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி வருகின்றனர்.
நான்கு ஆண்டுகள் முடிந்ததும் அதிகபட்சம் 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மற்ற 75 சதவீதம் பேர் பணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை இருந்தது.
இனி ஆறு ஆண்டுகள் சேவை! புதிய அறிவிப்பின்படி, முதல் நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு நிரந்தரப் பணிக்குத் தேர்வாகாத அக்னிவீரர்களுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் மொத்தம் ஆறு ஆண்டுகள் வரை சேவையாற்ற முடியும்.