அடிக்கடி மாறும் தலைவர்கள்; 20% எம்பி-க்கள் நினைத்தால் பிரதமர் காலி… இங்கிலாந்து தேர்தல் சீக்ரெட்!

Spread the love

16-ம் நூற்றாண்டில் கடல் வழியே புதிய நாடுகளைக் கண்டறியத் தொடங்கிய இங்கிலாந்து, தனது வலிமையான கடற்படை மற்றும் தொழிற்புரட்சியின் துணையோடு 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் உலக நாடுகளைத் தன் காலனிகளாக மாற்றியது. ஆனால் இன்று மூன்றாம் சார்லஸ் மன்னர் வழிநடத்தும் இங்கிலாந்து, தனக்கென ஒரு சரியான ஆளுமையைக் கண்டடையாமல் குழம்பி நிற்கிறது. அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமாவைக் குறிப்பிடலாம்.

கடந்த 2024 ஜூலையில் நடந்த தேர்தலில், இங்கிலாந்து தொழிலாளர் கட்சியை (Labour Party) அமோக வெற்றிக்கு இட்டுச் சென்றவர் கீர் ஸ்டார்மர். ஆனால், திங்கள்கிழமை (ஜூன் 22, 2026) காலை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.

இங்கிலாந்து நாடாளுமன்றம்
இங்கிலாந்து நாடாளுமன்றம்

அதாவது, அவர் பிரதமராகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்கூட நிறைவடையாத நிலையில் இந்த முடிவு பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டனின் முக்கியப் பொருளாதாரக் குறியீடுகள் சிலவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. உதாரணமாக, 2026-ம் ஆண்டின் முதல் காலாண்டில், உலகின் முன்னணிப் பொருளாதார நாடுகளான G7 கூட்டமைப்போடு ஒப்பிடுகையில், பிரிட்டன் வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அதுமட்டுமின்றி, அங்கு நிலவி வந்த பணவீக்கமும் கணிசமாகக் குறைந்து, ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ (Bank of England) நிர்ணயித்திருந்த இலக்கு அளவான 2 சதவீதத்தையும் எட்டியிருந்தது.

பொருளாதாரம் மட்டுமன்றி, பிரிட்டன் மக்களின் நீண்டகாலக் குறையாக இருந்த பொது சுகாதார அமைப்பில் (NHS) நல்ல முன்னேற்றமும் இருந்தது. மேலும், அந்நாட்டு அரசியலில் எப்போதும் விவாதத்திற்குரிய தலைப்பாக இருக்கும் ‘நிகரக் குடியேற்ற’ (Net Migration) எண்ணிக்கையும் குறைந்திருந்தது. இப்படி பல்வேறு சாதகமான சூழல்கள் நிலவிய போதிலும், அவரால் பிரதமராக நீடிக்க முடியவில்லை.

  • தொழிலாளர் கட்சிக்குள்ளேயே அவருக்கு இருந்த செல்வாக்கு அடியோடு சரிந்தது.

  • வரலாறுகாணாத அளவில் கருத்துக்கணிப்புகளில் அவருக்கு மக்கள் ஆதரவு குறைந்திருந்தது.

  • மே மாத உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட மோசமான தோல்விகள்.

  • குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த பீட்டர் மண்டல்சனை அமெரிக்காவுக்கான தூதராக நியமித்ததில் எழுந்த சர்ச்சை.

  • ‘Reform UK’ உள்ளிட்ட தீவிர வலதுசாரி கட்சிகளின் அசுர வளர்ச்சி, அடுத்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சியை வீழ்த்திவிடுமோ என்ற அச்சமும் கட்சிக்குள் மேலோங்கியது.

இங்கிலாந்து நாடாளுமன்றம்
இங்கிலாந்து நாடாளுமன்றம்

இதற்கிடையில், முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங், லேபர் கட்சியின் தலைமைக்கான போட்டியில் பங்கேற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், என்ன நடந்தது என்பதை யூகிப்பதற்கு முன்பே அவர், கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரும், தொழிலாளர் கட்சியின் ‘வடக்கு மண்டலத் தலைவர்’ ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham)-க்கு ஆதரவு தெரிவித்தார். ஆண்டி பர்ன்ஹாம் தேர்தலில் வென்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார்.

கட்சிக்குள் ஸ்டார்மருக்கு மாற்றாகப் பார்க்கப்படும் பர்ன்ஹாம் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற உடனே, ஸ்டார்மர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற அழுத்தம் உச்சத்தை அடைந்து, தற்போது அவரது ராஜினாமாவில் முடிந்துள்ளது. புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரை ஸ்டார்மர் இடைக்காலப் பிரதமராக நீடிப்பார் எனத் தெரிகிறது.

பிரதமரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக 6 பிரதமர்களைக் கண்டிருக்கிறது. 2016-க்குப் பிறகு எந்தவொரு இங்கிலாந்து பிரதமரும் தங்கள் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை. 2019 முதல் 2022 வரை பிரதமராகப் பணியாற்றிய போரிஸ் ஜான்சன் மட்டுமே பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு மிக நெருக்கமான காலம் பிரதமராக இருந்திருக்கிறார்.

இங்கிலாந்து நாடாளுமன்றம்
இங்கிலாந்து நாடாளுமன்றம்

இங்கிலாந்து நாடாளுமன்றம் ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்’ (House of Lords) மற்றும் ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ (House of Commons) ஆகிய இரு அவைகளைக் கொண்டுள்ளது. ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ அவையில் உள்ள 650 இடங்களில் பெரும்பான்மையைப் பெறும் அரசியல் கட்சி பிரதமரைத் தேர்ந்தெடுக்கிறது. பொதுவாக ஆளும் கட்சியின் தலைவரே பிரதமராகிறார்.

பிரதமர் ஐந்து ஆண்டுகள் என்ற நிலையான பதவிக்காலத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது தவறான புரிதல். உண்மையில், இந்தக் கால வரம்பு என்பது ஆட்சியில் இருக்கும் கட்சிக்குரிய நாடாளுமன்றக் காலத்தைக் குறிக்கிறதே தவிர, பிரதமராகும் தனிநபருக்குரியது அல்ல. எனவே, அரசும் கட்சியும் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், கட்சியின் உயர்மட்டத்தில் தொடர்ந்து மாற்றங்களும் குழப்பங்களும் ஏற்படக்கூடும்.

சரி தேர்தலுக்குள் வருவோம்…. பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை பொதுத் தேர்தலுடன் தொடங்குகிறது. இதில் குடிமக்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினரைத் (MP) தேர்ந்தெடுக்க வாக்களிக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த உறுப்பினர் ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ அவையில் உள்ளூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ அவையில் பெரும்பான்மை இடங்களைப் பெறும் அரசியல் கட்சியின் தலைவர், புதிய அரசை அமைப்பார். எனவே, இங்கிலாந்து பிரதமர் பதவி என்பது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறும் திறனிலிருந்தே உருவாகிறது.

இங்கிலாந்து நாடாளுமன்றம்
இங்கிலாந்து நாடாளுமன்றம்

கட்சித் தலைவரை மாற்றுவதற்கான வழிமுறை, அந்தக் கட்சி பின்பற்றும் உட்கட்சி நடைமுறைகளைப் பொறுத்தது. அதாவது, தற்போதைய தலைவர் ராஜினாமா செய்தாலோ அல்லது தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20% பேர் ஒரு அதிகாரபூர்வ போட்டியாளரை ஆதரித்தாலோ கட்சியின் தலைமைத்துவத்திற்கான போட்டி தொடங்கும்.

இது தவிர வேட்பாளர்கள் தொகுதி அளவிலான தொழிற்கட்சிகளின் (CLP) 5% ஆதரவையோ அல்லது தொழிற்சங்கங்கள் போன்ற மூன்று இணை அமைப்புகளின் பரிந்துரையையோ கட்சித் தலைவருக்கான தேர்தலில் பெற வேண்டும்.

அதைத் தொடர்ந்து, தேர்தலுக்கான கால அட்டவணையை முடிவு செய்ய தேசிய செயற்குழு உடனடியாகக் கூட்டப்படும். இதில், தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களைப் பெறுவதற்கான காலக்கெடு மற்றும் உட்கட்சி வாக்குப்பதிவு செயல்முறைக்கான கால அளவு ஆகியவை முடிவு செய்யப்படும். இறுதி வாக்குச்சீட்டு பட்டியல் தயாரானதும், வாக்குப்பதிவு நடைபெறும்.

வெற்றிபெறும் வேட்பாளர் 50%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். முதல் சுற்றில் யாரும் வெற்றிபெறவில்லை என்றால், வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றிலும் குறைவான ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் நீக்கப்பட்டு, அவர்களின் வாக்குகள் மாற்றப்படும்.

பக்கிங்ஹாம் அரண்மனை
பக்கிங்ஹாம் அரண்மனை

இறுதியில் வெற்றிபெறும் வேட்பாளர் கட்சியின் தலைவராகவும், இங்கிலாந்தின் பிரதமராகவும் முடியும். அதேநேரம் வாக்கெடுப்பில் வெற்றி பெறுபவர் தானாகவே ஆட்சிக்கு வரமுடியாது. தற்போது பிரதமராக பதவி வகித்தவர் (ஸ்டார்மர்) மன்னர் மூன்றாம் சார்லஸிடம் தனது முறையான ராஜினாமாவைச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்கட்சித் தலைவர் மன்னருடனான சந்திப்பிற்கு அழைக்கப்படுகிறார். அங்கு ஒரு புதிய அரசை அமைப்பதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்படும். அதை ஏற்றுக்கொண்டவுடன், புதிய கட்சித் தலைவர் அதிகாரபூர்வமாக இங்கிலாந்தின் பிரதமராகிறார்.

அடுத்து தேர்வு செய்யப்படும் பிரதமராவது முழு ஆட்சிக் காலமும் நீடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *