“அடிப்படைப் புரிதல் இல்லாத கூட்டம் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது!”- வெளுத்து வாங்கும் வேல்முருகன் | Tamizhaga vazhvurimai party leader velmurugan shared his views on current political happenings

Spread the love

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, கரப்பான் ஜனதா கட்சியினர் நாடுமுழுக்க நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் சென்னையில் அவர்களது கட்சித் தலைமை அலுவலகத்திலேயே தொடர் போராட்டம்  நடத்தி ஊடக கவனம் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்…

“நீட் தேர்வு விவகாரத்தில், “தேர்வை ரத்து செய்வதுதான் நிரந்தரத் தீர்வு. மற்ற கோரிக்கைகள் முழு பலனைத் தராது’ என்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்தை வரவேற்கிறீர்களா?”

“அந்த அறிக்கையில் இருக்கக்கூடிய கருத்துகள் எனக்கும் உடன்பாடானதுதான். அதேசமயம் இதைச் சொல்கின்ற தி.மு.க., கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு எதிராக ஒரேயொரு முறை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை மட்டுமே நடத்தியுள்ளது.

வெளிநாட்டில் உள்ள ஓர் இளைஞர் இந்தியா வந்து, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து புதிதாக ஓர் இயக்கத்தை வழிநடத்தி மத்திய பா.ஜ.க அரசுக்கு நெருக்கடி கொடுத்து பணிய வைக்க முடியும் எனில், ஒரு கோடியே 20 லட்சம் வாக்குகளைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக இருக்கின்ற தி.மு.க., நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் போராட்டத்தை ஏன் நடத்தவில்லை? அவர்களைத் தடுத்தது யார்? அதுதான் என் கேள்வி!”

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

“தி.மு.க-வை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்புகிற நீங்கள், காங்கிரஸ் கட்சி ஏன் அகில இந்திய அளவில் போராட்டம் நடத்தவில்லை என ஏன் கேட்கவில்லை?”

“காங்கிரஸை நோக்கியும் இதே கேள்வியை நான் முன்வைக்கிறேன். எம்.எல்.ஏ., எம்.பி என எந்தப் பதவியும் இல்லாத விவசாய சங்கங்களால் மாபெரும் போராட்டம் நடத்தி மத்திய பா.ஜ.க அரசைப் பணியவைத்து சட்டத்தையே வாபஸ் பெற வைக்க முடியும் என்றால், இது போன்ற கட்சிகளால் ஏன் முடியாது?

‘இந்தி திணிப்பு’க்கு எதிராக கடந்த காலத்தில் மிகச்சிறப்பான போராட்டங்களை நடத்திய வரலாறு தி.மு.க-வுக்கு உண்டு. இவ்வளவு பெருமைமிக்க தி.மு.க., நேற்று ஆரம்பிக்கப்பட்ட காக்ரோச் கட்சி போராட்டத்துக்கு தனது மாணவர் அணியையும் எம்.பி-யையும் அனுப்பி பேசவைக்கிறபோதுதான், ஏன் நீங்களே தன்னிச்சையாக போராட்டத்தை முன்னெடுக்கவேண்டியதுதானே என நான் தி.மு.க-வை நோக்கி கேள்வி எழுப்புகிறேன்.”

“கடந்த தி.மு.க-வின் ஐந்து ஆண்டுக்கால ஆட்சியோடு ஒப்பிடும்போது த.வெ.க-வின் ஆட்சி எப்படியிருக்கிறது?”

“கடந்த தி.மு.க ஆட்சியில், அதிகார வர்க்கத்திலிருந்த ஒருசிலர் தன்னிச்சையாக செயல்படுவது, ஆட்சிக்கு அவப்பெயரைத் தேடித்தரும் என தொடர்ந்து 5 ஆண்டுக்காலமும் நான் சட்டமன்றத்தில் வலியுறுத்திவந்தேன். அதுமட்டுமல்லாமல், தி.மு.க-விலிருந்த ஒருசில அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளால் இன்றைக்கு அந்தக் கட்சி ஒரு பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. அதேசமயம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களோ அல்லது ஒழுங்கான கட்டமைப்போ இந்த த.வெ.க ஆட்சியில் இல்லை என்பதுதான் இந்த 70 நாள் ஆட்சியில் தெரியவருகிறது.

தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பதுபோல, த.வெ.க தொண்டர்கள் இன்றைக்கு ஆய்வு என்ற பெயரில், மருத்துவமனை, கல்லூரிக்குப் போவதும், அதிகாரிகளின் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அட்ராசிட்டி செய்வதுமான நிலை தொடர்கிறது. ஆக, அரசியல் அதிகாரம் என்றால் என்னவென்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாத ஒரு கூட்டம் இன்றைக்குத் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. இவர்களுக்கு நீட் தேர்வு, மேகதாது, முல்லைப்பெரியாறு, காவிரி பிரச்னை என எதைப்பற்றியும் தெரியாது.

கடந்த தி.மு.க ஆட்சியின்போது, என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான அறிவிப்பு வெளியானவுடனேயே, தி.மு.க அரசு எனது தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டியது. இதையடுத்து என்.எல்.சி உற்பத்தியை ஜீரோவுக்குக் கொண்டுவந்து, நிர்வாகத்தை நாங்கள் பணியவைத்தோம். ஆட்சி மாறியவுடன் இப்போது மீண்டும் என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்று வருகிறார்கள். ஆனால், இன்றைய த.வெ.க அரசு இதை எதிர்த்து வெறுமனே ஒரு கடிதம் மட்டும் எழுதி பொறுப்பை முடித்துக்கொண்டார்கள். வேறு ஒன்றும் செய்யவில்லை!”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *