அணுக்கனிம சுரங்கத் திட்டம்: “உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல்…" – அமைச்சர் பிரபு

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம (Atomic Minerals) சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 ஹெக்டேர் நில ஒதுக்கீடு இந்திய அரிய மண் வளங்கள் நிறுவனத்திற்கு (IREL) அளிக்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி காலாவதியாகும் கடைசி நாளில் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆட்சி அமைத்த தவெக அரசு புதிய அரசாணை வெளியிட்டது. இந்த அதிரடி நீட்டிப்பு காரணமாக, இச்சுரங்கத் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க IREL நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது. இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க பரிந்துரைக்குமாறு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் அந்நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதால், குமரி கடலோரப் பகுதியில் நிர்வாக ரீதியான பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இருப்பினும், இத்திட்டத்திற்கு எதிராக கடந்த 2024 நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில், இது சுற்றுச்சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எனக்கூறி கடுமையான எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அன்று ஆளும்கட்சியாக இல்லாமல் இருந்த போது , இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில் அதே திட்டத்திற்கு நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன.

சீமான், அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எனப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர். TK. பிரபு தன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பதில் கன்னியாகுமரி மக்கள் நலனிற்கு எதிராக தமிழ்நாடு அரசு எவ்வித முடிவும் எடுக்காது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் பணி தொடர்பாக, கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடனான தமிழக அரசு சார்பிலான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று (03.07.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் பங்கேற்றேன்.

உள்ளூர் மக்களுடன் ஆலோசனை; அணுக்கனிக திட்டம்
உள்ளூர் மக்களுடன் ஆலோசனை; அணுக்கனிக திட்டம்

இக்கூட்டத்தில், “மக்களின் நலனிற்கு எதிராகவோ அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலோ, இது சார்ந்து எவ்வித முடிவையும் உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல் தமிழ்நாடு அரசு எப்போதும் முடிவு எடுக்காது” என்று அரசுத் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாண்புமிகு நிதியமைச்சர் திரு. நெ. மரிய வில்சன், மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஸ்ரீநாத், இயற்கை வளங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு, IAS மற்றும் குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தாரகை கத்பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *