`அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம்' – தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? | ஓர் பார்வை!

Spread the love

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மாநிலத்தில் போதைப் பொருளை ஒழிக்க போதைப் பொருள் தடுப்புப் படை உருவாக்கப்படும் என முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வாக்குறுதி அளித்தாா். இதை அமல்படுத்தும் விதமாக கடந்த மே 10-ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றபோது, போதைப் பொருள் தடுப்புப் படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 கோப்புகளில் கையொப்பமிட்டாா்.

அதைத் தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையில் ஆகஸ்ட் 11-ம் தேதி “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதில் ‘போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்’ விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

மெத் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலன்
மெத் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலன்

மேலும், தமிழக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் படைக்கு ரூ.264 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில்தான், அக்டோபர் மாதம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 135 கிலோ மெத் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.270 கோடி.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தவெக நிர்வாகி பூபலன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தவெக நிர்வாகி மெத் கடத்தலில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் அரங்கில் விவாதமானது.

அதன் தொடராக, சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சென்னை மாதவரம் பகுதியில் பைக்கில் வந்த இருவரைப் பிடித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து 135 கிலோ மெத் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹெராயின்

இதன் மதிப்பு ரூ.270 கோடிக்கு மேல் என்கிறார்கள். இப்படி தொடர்ந்து தமிழ்நாட்டில் கோடிக்கணக்கு மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்படுவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரங்கள் தொடர்பாக விரிவாக பேச மூத்த ஊடகவியலாளர் அய்யநாதனை தொடர்புகொண்டோம். அவர், “இந்தியாவைப் பொறுத்தவரை போதைப்பொருள் கடத்தல் என்பது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் ஒரு தீராத பிரச்னை. போதைப்பொருட்களைக் கடத்துவதும், விற்பனை செய்வதும், இந்தியாவை ஒரு மையமாக வைத்து மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போதும் கூட, கைப்பற்றப்பட்டுள்ள இந்த ஹெராயின் இலங்கைக்குக் கடத்துவதற்காகத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்தகைய கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் இந்திய ஒன்றிய அரசில் ‘நார்கோடிக்ஸ் கண்ட்ரோல் பீரோ’ (NCB) என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு அனைத்து மாநில அரசுகளின் காவல்துறை அமைப்புகளுடன் இணைந்து, கூட்டுக் குழுக்களை அமைத்துப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. NCB கட்டமைப்பே பல்வேறு விதமான பணிநிலைகளைக் கொண்ட ஒரு அமைப்பாக இயங்கும். முதலில்… இங்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது.

அய்யநாதன்
அய்யநாதன்

அந்தக் குழுவில் காவல்துறைத் தலைவர் (DGP) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, மாவட்ட அளவிலான ஒரு குழுவும் உள்ளது. அதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (SP) உள்ளிட்டோர் இருப்பார்கள். இவ்வாறு பல்வேறு நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் மூலம்தான் இத்தகைய கடத்தல்கள் தடுக்கப்படுகின்றன. வழக்கமான காவல்துறையினருக்கு போதைப்பொருள் கடத்தல் தொடர்பான உளவுத்துறைத் தகவல் ஏதேனும் கிடைத்தால், உடனடியாக இந்த அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து களத்தில் இறங்கி நடவடிக்கை எடுப்பார்கள்.

இப்படித்தான் தற்போதைய நடைமுறை இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில், போதைப்பொருள் வழக்கில் சாதிக் பாஷா என்பவரைக் கண்டுபிடித்துப் பிடித்தது NCB அமைப்புதான். ஆனால், இங்கு சமீபத்தில் மெத், ஹெராயின் ஆகியவை ‘வருவாய் புலனாய்வு இயக்குநரகம்’ கைப்பற்றியுள்ளது. இவர்கள் எப்படி இந்த விவகாரத்திற்குள் வந்தார்கள், எந்த அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.

உண்மையில் போதைப்பொருள் விவகாரம் என்பது அமைப்பு தொடர்பான ஒரு பிரச்னையே தவிர, வெறும் அரசியல் சார்ந்த விஷயம் கிடையாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், இந்த அளவிற்குப் போதைப்பொருள் பிடிபடுவது புதுமையான விஷயமுமல்ல.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

குஜராத் கடற்கரைப் பகுதிகளிலும், அங்குள்ள அதானி துறைமுகத்திலும் 3,000 கோடி, 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபடுகின்றன. அப்படிப் பிடிபட்டதை விட, எத்தனை மடங்கு போதைப்பொருட்கள் காவல்துறையின் கண்களில் படாமல் தப்பித்துச் சென்றன என்பது நமக்குத் தெரியாது. எனவே, இது அரசியலைத் தாண்டி ஒட்டுமொத்தமாகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த வேண்டிய ஒரு விஷயமாகும். ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் NCB போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படாமல், இங்கு 264 கோடி ரூபாய் ஒதுக்கி அதற்கென ஒரு தனிப் பிரிவை உருவாக்கியது எதற்காக என்று தெரியவில்லை.

அந்த 264 கோடி ரூபாயை எந்த அடிப்படையில், எப்படிச் செலவு செய்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு அரசு மாநில எல்லைக்குள் எத்தனை குழுக்களை வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால், அதனால் பெரிய பலன் இருக்காது.

ஏனென்றால், போதைப்பொருட்களைப் பயன்படுத்துவோர், தற்போது அவற்றைக் கூரியர் மூலமாகச் சிறிய அளவுகளில் பெறுகிறார்கள். இதனை எப்படித் தடுப்பது? எத்தனை பேர் இதைப் பயன்படுத்துகிறார்கள், எவ்வளவு போதைப்பொருள் புழக்கத்தில் இருக்கிறது என்ற தரவுகள் கூட இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடமே இல்லை.அப்படிப்பட்ட ஒரு சிக்கலான சூழல்தான் இப்போது நிலவுகிறது.

போதைப்பொருள்

எனவே, இந்திய அளவில் செயல்படும் NCB யின் கிளையாக இருந்து, அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் திறம்படத் தடுக்க முடியும். எனவே, அத்தகைய ஒருங்கிணைப்பே இப்போது மிக முக்கியமானது. அதைச் செய்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். மேலும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுகிறார்கள் எனக் கூறமுடியாது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இதில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால், இதில் அவ்வளவு பெரிய பணம் புழங்குகிறது.

உதாரணத்திற்கு, இப்போது பிடிபட்டுள்ள இந்த 700 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கடத்தி இலங்கைக்கு கொண்டு சென்றால், அதில் 10 சதவீதம் கமிஷன் என வைத்துக்கொண்டால்கூட, சுமார் 70 கோடி ரூபாய் கிடைக்கிறது. இது எவ்வளவு பெரிய பணம்! எனவே குறுக்கு வழி வணிகமாக இந்தக் கடத்தல் மாறியுள்ளது. எதிர்க்கட்சிகள் அரசின் மீது குற்றம் சாட்டுவது வெறும் அரசியல். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒட்டுமொத்தமாக தொடர்ந்து அதிகரிக்கும் போதை கலாச்சாரம் என்பது இந்த அமைப்பின் தோல்வி என்பதே உண்மை.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *