அதிகார ஆதிக்கத்தில் சேகர்பாபு – மா.சு..? – அறிவாலயத்திற்கு பறந்த புகார்கள்.! – Kumudam

Spread the love

தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைமை இந்த ஆய்வை முன்னெடுத்து வரும் நிலையில், மூத்த தலைவர்கள் மீதே அதிருப்தி குரல்கள் எழுந்திருப்பது கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்னை மண்டலத்தில் சேகர்பாபு மற்றும் மா.சுப்ரமணியம் ஆகியோர் மீது அடுக்கடுக்கான புகார்கள் பறந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 
கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்பட்ட கருத்துக்களில், இரு அமைச்சர்களின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னை அரசியலில் தன்னைத் தாண்டி வேறு யாரும் கட்சித் தலைமையை அணுகக்கூடாது என்ற வகையில் சேகர்பாபு செயல்பட்டதாகவும், இது அடிமட்ட தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அணுகுமுறையை கட்சித் தலைமை உரிய நேரத்தில் கண்டிக்காததும் தொண்டர்களின் அதிருப்தியை அதிகரித்ததாக கூறப்படுகிறது. மேலும், கோவில் அறங்காவலர் குழுவில் சேகர்பாபுவுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கியதாகவும், அதிமுகவில் இருந்து வந்தோருக்கு அறநிலையத் துறையில் பொறுப்பு வழங்கியதாகவும் அறிக்கையில் புகாராக இருந்துள்ளது.  

ஏற்கனவே, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்றுப்போனதற்கு சேகர்பாபு தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சேகர்பாபு மீது குற்றஞ்சாட்டினார். அதில், ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான். தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா சேகர்பாபு” என பரந்தாமன் கேள்வி எழுப்பினார். இதே போல சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பரிதி இளம் சுருதியும், சேகர்பாபு தான் ஸ்டாலின் தோல்விக்கு காரணம் என சமூகவலைதளத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்படி சேகர்பாபு மீது ஒருபக்கம் புகார்கள் அடுக்கப்பட, மா.சுப்ரமணியம் மீது எக்கச்சக்க புகார்கள் பறந்துள்ளன. 

குறிப்பாக, சுகாதாரத்துறை நிர்வாகம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், கட்சியினருடனான அணுகுமுறையில் பல குறைகள் இருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர், தங்களது குடும்பத்தினருக்கான பணியிட மாற்றம், மருத்துவத் துறை தொடர்பான பரிந்துரைகள் மற்றும் நிர்வாக உதவிகளைப் பெறுவதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், அமைச்சரை நேரடியாக அணுக முடியாத சூழல் நிலவியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அமைச்சரின் அலுவலகத்தை அணுகுவதற்குக் கூட அவரது உதவியாளர்கள் மற்றும் நெருக்கமான வட்டாரங்களின் ஒப்புதலைப் பெற வேண்டியிருந்ததாகவும், அதனால் அடிமட்ட நிர்வாகிகள் பலர் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் புகார்கள் பதிவாகியுள்ளன. “கட்சிக்காரர்களாக இருந்தாலும், உதவியாளர்களை கவனித்தால்தான் காரியம் நடக்கும்” என்ற மனநிலை உருவாகியிருந்ததாக சிலர் ஆய்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சராக இருந்த காலத்தில் நிர்வாக திறமையில் குறை சொல்ல முடியாவிட்டாலும், கட்சியினருடன் நெருக்கமாக பழகாதது மற்றும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி முக்கியத்துவம் வழங்காதது அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நடுத்தர நிர்வாகிகளிடையே ஏமாற்ற உணர்வு அதிகரித்ததாக கூறப்படுகிறது.

“அதிகாரப் போதை இருவரின் செயல்பாட்டிலும் பிரதிபலித்தது. அதனால் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே அதிருப்தி அதிகரித்தது” என ஆய்வுக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயும் பணியில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த இந்த கருத்துக்களும் முக்கியமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *