`அந்த திட்டம் வேண்டாம்!' – அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

Spread the love

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, விஜய்க்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால், ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத பட்சத்தில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான திரைமறைவு பேச்சுகள் நடப்பதாக வெளியான தகவல்தான் களத்தை அனலாக்கியது.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

‘தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கப் போகிறது. இது மக்களின் முடிவுக்கு எதிரானது’ என அரசியல் விமர்சகர்களும் மூத்த பத்திரிகையாளர்கள் சிலரும் சமூக வலைதளங்களில் எழுத, அரசியல் களம் அனலாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், இன்றும் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தார். அப்போது ஆளுநர் தரப்பில், “உங்களுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது? பெரும்பான்மையை எப்போது நிரூபிக்க முடியும்? யார் யார் உங்களுக்கு ஆதரவளிக்க உள்ளார்கள்? நிலையான அரசாங்கத்தை வழங்க முடியுமா?” உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனிடையே, திமுக தலைமை அதிமுகவுடனான கூட்டணி ஆட்சித் திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, திமுகவின் மூத்த நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் திமுக தலைமையைச் சந்தித்து, “அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தால் அது நமக்கு எதிர்காலம் இல்லாமல் செய்துவிடும். இன்று எடுக்கும் முடிவு தொண்டர்களையும் சோர்வடையச் செய்யும். இன்று பழனிசாமி ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்கும் பட்சத்தில், நாளை அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாடு எடுக்கும்போது அதன் பழி நம் மீதும் விழும். தற்போதைய நிலையில் தவெக ஆட்சி அமைப்பதே சரியானதாக இருக்கும். நம்மால் திறமையான எதிர்க்கட்சியாக செயல்பட முடியும். அதன் மூலம் இழந்த ஆதரவை மீட்டெடுக்க முடியும். மாறாக அதிமுகவுக்கு ஆதரவாக நின்றால், எதிர்கட்சியாகவும் செயல்பட முடியாமல் போகும் ” என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் தடுப்பது பாஜக தான் எனும் கருத்து மக்களிடம் இருக்கிறது. நாமும் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது என்பது, பாஜக ஆடும் ஆட்டத்துக்கு நாமும் உடந்தை என் நம் பக்கம் மக்களின் கோபம் திரும்பி விடும் சிக்கலும் உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் – திமுக

இதனைத் தொடர்ந்து திமுக தலைமையும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒருவர் மூலம், “இந்தத் திட்டம் வேண்டாம்; திமுகவுக்கு இதில் மாற்றுக் கருத்து உள்ளது” என்று தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. .

தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு நடத்தி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக தலைமை, இந்த திட்டத்தை கைவிட்ட பின்னர் தான் தற்போது இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின்னர் அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *