கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த செந்தில் பிரபு என்பவர், கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரின் மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தார். சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த அனுகீர்த்தனா, நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து கடந்த ஆண்டு தீவிரமாகப் படித்துத் தேர்வும் எழுதி இருந்தார். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக ஆவலோடு காத்திருந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அனுகீர்த்தனாவிற்கு கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.

‘மீண்டும் தேர்வு எழுதினால் தேர்ச்சி பெற முடியுமா?’ என்ற மன அழுத்தம் காரணமாக… இன்று அதிகாலையில் அனுகீர்த்தனா தனது சித்தப்பாவிற்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு, உடல்வலிக்கு பயன்படுத்தும் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு உறவினர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அனுகீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரின் உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனு கீர்த்தனாவின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவி அனு கீர்த்தனாவின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வரை உடலைப் பெறமாட்டோம் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் மற்றும் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.