Cricket
oi-Yogeshwaran Moorthi
லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ரோஹித் சர்மா லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பின் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தும் 5வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியின் போது ரோஹித் சர்மா இச்சாதனையை நிகழ்த்தினார். இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 123 ஸ்டிரைக் ரேட்டில் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் குவித்தார்.

தற்போதைய நிலவரப்படி, ரோஹித் சர்மா 356 லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாடி 37 சதங்களுடன் 14,038 ரன்கள் குவித்துள்ளார். லிஸ்ட்-ஏ போட்டிகள் என்பது சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் உள்நாட்டு ஒருநாள் போட்டிகள் என அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் அடங்கிய எலைட் பட்டியலில் 5-வது வீரராக ரோஹித் இணைந்துள்ளார்.
இப்போட்டியில் முதலில் பந்துவீசிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, இந்திய அணியின் இளம் பேட்டர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர். கேப்டன் சுப்மன் கில்லின் அதிரடியாக விளையாடி 110 பந்துகளில் 154 ரன்களையும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 79 பந்துகளில் 125 ரன்களையும் விளாசி தள்ளினர். இதனால் இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
இதற்கு முன்பாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை விளாசியவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, ராகுல் டிராவிட் இருக்கின்றனர். இந்த பட்டியலில் ரோகித் சர்மா இணைந்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடித்து வரும் ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மாவின் இந்த புதிய மைல்கல் அவரது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
39 வயதை எட்டிவிட்ட ரோகித் சர்மா, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறார். தென்னாப்பிரிக்காவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாட ரோகித் சர்மா ஃபிட்னஸையும் தீவிரமாக கடைபிடித்து வருகிறார். இதனால் ரோகித் சர்மா சிறந்த ஃபார்மில் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வேண்ட தொடங்கியுள்ளனர்.