அன்பில் மகேஷ் கைது… “இன்னும் பல ஃபைல்கள் காத்திருக்கு!” நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்த வழக்கில் திமுக செய்தித் தொடர்பு துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் வழக்கில் இடம்பெற்றது.

இந்தப் புகார் தொடர்பாக அன்பில் மகேஷுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அவருக்குத் தொடர்புடைய சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகளில் ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று (அக்.,-27) விசாரணைக்கு வந்த போது முன்ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் இருந்த அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக அன்பில் மகேஷ் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனை முடிந்ததும் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது. அதேவேளை, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அன்பில் மகேஷை நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக அமைச்சர் நிர்மல் குமார், இந்த விவகாரம் குறித்துப் பேசினார்.

அப்போது அவர், “முதலமைச்சர் விஜய் மூன்று ஃபைல்கள் இருப்பதாகக் கூறியிருந்தார். ‘ஃபைலை ஓபன் செய்யுங்கள்’ என்று நீங்கள்தானே கேட்டீர்கள். ஒரே ஒரு ஃபைலைத் திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல் இன்னும் பல ஃபைல்கள் காத்திருக்கின்றன” என்று கூறினார்.

மேலும், தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் விமர்சனம் செய்தார்.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  நீதிமன்றத்திற்கு வெளியே அன்பில் மகேஷ் மற்றும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கரூர் சம்பவம் குறித்து கோஷமிட்ட வார்த்தைகளைக் குறிப்பிட்டு அவர் பேசியிருக்கிறார். நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த அன்பில் மகேஷின் ஆதரவாளர்கள், “அன்னைக்கே கரூர்ல போட்டிருந்தா இது நடந்திருக்குமா… கரூர்லயே நாம பண்ணி இருக்கணும்” என்று முழக்கமிட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தேனி சிறையில் இருந்து இரவில் கைதி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது போல நாடகமாடி 17 கைதிகளும் கும்பலாக தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது. தப்பியோடிய 17 பேரில் பிரவீன், சிலம்பரசன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய 4 கைதிகளை போலீஸார் சுற்றிவளைத்த நிலையில், எஞ்சிய 13 பேரைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *