இறைவனுக்கே ஒரு வழக்கு. அந்த வழக்கை திருவெண்ணைநல்லூர் திருக்கோயிலிலே வைக்கிறார்கள். வாதியாக இறைவன், பிரதிவாதியாக சுந்தர பெருமான். இரண்டு பேருக்கும் வழக்கு. இறைவன் போட்ட வழக்கு, சுந்தர பெருமான் எனக்கு அடிமை என்று போட்ட வழக்கு.
அந்த வழக்குக்குத் தீர்ப்பை சொன்னவர்கள் திருவெண்ணைநல்லூர் திருக்கோயில் வளாகத்தில் இருந்த சான்றோர் பெருமக்கள். ஆக, நீதி வழங்குகிற சபைகள் நம் திருக்கோயில்களில் இயங்கின என்பதற்கான அடையாளம்தான் இது.
ஆக, திருக்கோயில் என்பது மனித சமூகத்தின் வாழ்க்கையோடு நிறைந்திருந்தது. அன்பை வளர்த்து தந்தது. கலைகளை வளர்த்து தந்தது. பண்பை வளர்த்து தந்தது. மானுடத்தை உயர்த்திப் பிடித்தது. மானுடம் உறவு கொண்டு வாழ்வதற்கான வாழ்க்கை முறை அங்கு இருந்தது.
காதல் வாழ்க்கையைக்கூட கற்றுத் தந்த இடம் திருக்கோயில் வளாகம்தான். பரவை நாச்சியாருக்கும் சுந்தர பெருமானுக்கும் உறவு ஏற்பட்டது திருக்கோயில் வளாகத்தில்தான். ஆக, காதல் வாழ்க்கையை கற்றுத் தருகிற இடமாகவும் திருக்கோயில் இருந்தது. தோழமை வாழ்க்கையைக் கற்றுத் தருகிற இடமாகவும் திருக்கோயில் இயங்கியது. சுந்தர பெருமானுக்கும் இறைவனுக்கும் ஏற்பட்ட நட்பு திருக்கோயில் வளாகத்தில்தான்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் உரையை வீடியோ வடிவில் காண
ஆக, இப்படியெல்லாம் காதலை, நட்பை, பண்பை, கலாசாரத்தை, கலைகளை, கல்வியை, நீதியை வழங்குகிற இடமாகத் திருக்கோயில் இருந்ததால்தான் அது மனித சமூகத்தின் மையம் என்று அழைக்கப்பட்டது.
இந்தத் திருக்கோயில்கள்தான் பண்பாட்டை வளர்க்கிற பண்பாட்டு உறைவிடங்களாக இருந்த காரணத்தால், நம் மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஆன்மிகப் பெருவழியில் வைத்த உரத்த முழக்கம் இதுதான்:
‘கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோயில்.’
கோயிலுக்கும் குடிமக்களுக்கும் இருக்கிற நெருங்கிய உறவை, அன்பான உறவை, மனிதத்தை வளர்க்கிற உறவைத் தான் ‘கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோவில்’ என்றார்.
கடவுளைப் போற்றி, மனிதனை நினைத்து மதிக்கிற போக்கில் நம் ஆன்மிகம் வளரட்டும். அதற்குத்தான் அன்பே சிவமாக மாறுகிற நிலை, சிவமே அன்பாய்க் காட்சி தருகிற நிலை, அன்பும் சிவமும் இரண்டு இல்லை என்பதை அடையாளம் காட்டுகிற நிலை.
அந்த நிலையில் மானுடம் பயணிக்கட்டும். அன்பு எங்கும் தலைக்கட்டும். ஆன்மிகம் எந்நாளும் செழிக்க!