அப்பாக்களின் மௌன ராகம்! | My vikatan article about fatherhood

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இன்றைய தலைமுறை காதலைக் கொண்டாடுகிறது; அன்பை வார்த்தைகளால் வாரி இறைக்கிறது. அணைத்துக் கொள்வதும், முத்தமிடுவதும், “ஐ லவ் யூ” என்று சொல்லிக் கொள்வதும் இன்று இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், என் அப்பாவின் தலைமுறை அப்படிப்பட்டதல்ல. அவர்கள் அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த தெரியாத, மௌனத்தை மட்டுமே ஆயுதமாகக் கொண்ட விசித்திரமான மனிதர்கள். அவர்கள் அகராதியில் அன்பிற்கு ஒரே ஒரு மாற்றுச்சொல் தான் இருந்தது, அது—கண்டிப்பு.

சிறு வயதில் நம் அப்பாக்களை நமக்கு ஒரு கடுமையான அதிகாரியாக பார்க்கத் தெரிந்திருக்கலாம். இன்றைய பிள்ளைகளைப் போல அவரிடம் ஓடிப்போய் கை கோர்த்து நடக்கவோ, இறுக்கமாக கட்டிப்பிடித்து முத்தமிடவோ அன்று அவர்களுக்கும் தெரியவில்லை, நமக்கும் துணிவில்லை. ஒருவிதமான பயமும் இடைவெளியும் எப்போதும் நமக்குள் இருந்தது.

வாழ்க்கை எனும் பெருவெளியில் கல்வி மட்டும் தான் ஒரு மனிதனை அரியாசனத்தில் அமர வைக்கும் என்பதில் அவர்கள் தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் படித்துப் பேரறிஞர்களாக வேண்டும் என்ற ஒற்றை ஒளிரும் புள்ளியை நோக்கி, தங்களின் ஒட்டுமொத்த ஆயுளையும் ஓட்டப்பந்தயமாக மாற்றி, மூச்சிரைக்க ஓடிய மனிதர்கள் அவர்கள்.

அந்தக் காலத்து அப்பாக்கள் நேரத் தவறாமையைக் கடிகாரத்தின் முட்கள் வழியே அல்ல, தங்களின் மூச்சுக் காற்றின் வழியே பின் தொடர்ந்தார்கள். ஒரு இடத்திற்கு அவர்கள் ஒருபோதும் தாமதமாகச் சென்றதே இல்லை; காலம் அவர்களுக்கு கட்டுப்பட்டு நின்றது.

அவர்களின் அதே கண்டிப்பு உணவுக் கூடத்து மேசையிலும் தொடர்வதுண்டு. அவர்களில் பலர் சாப்பாட்டு பிரியர்களாக இருந்திருப்பார்கள்; அவர்கள் தனக்கென்று ஆசைப்பட்டு கேட்டு வாங்கி உண்பது உணவாக மட்டுமாகத்தான் இருந்திருக்கும்.

உணவை வீணாக்குவதை அந்தப் பழைய தலைமுறை ஒரு பாவத்தைப் போல பார்த்தது. இன்று ஆடம்பர உணவகங்களில் நாம் உணவை மீதி வைத்துப் பழகியிருக்கும் நாகரிகத்தின் முகத்தில், “சாப்பிடும் அளவை மட்டும் எடுத்துக் கொள்” என்ற அவர்களின் இந்த ஒற்றை வாக்கியம், ஆகச்சிறந்த ஒழுக்கமாகவும், பசியின் வலியாகவும் அறைகூவல் விடுக்கும்.

அதே சமயம், நம் அப்பாக்களில் பலர் தீவிரமான வாசகர்களாக இருந்தார்கள். புத்தக உலகமே அவர்களுக்குள் சுருண்டு கிடந்தது. பல்வேறு தலைப்புகளைப் பற்றி தங்கள் பிள்ளைகளோடு மணிக்கணக்காக விவாதிக்கும் அறிவுத்திறன் அவர்களிடம் இருந்தது. உணர்வுகளைப் பேசத் தெரியாத அந்தக் காலத்து அப்பாக்கள், அறிவின் வழியாகவும் கருத்துப் பரிமாற்றங்கள் வழியாகவும் நம்முடன் ஒரு ஆழமான பிணைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *