அமெரிக்காவில் அதிர்ச்சி! 190 பேர் பயணம் செய்த சொகுசு கப்பல் மீது பயங்கர மோதல் ! – Kumudam

Spread the love

அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, நங்கூரமிட்டு நின்ற 5 மாடி சொகுசு கப்பல் மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சொகுசு கப்பல் கடுமையாக சேதமடைந்து ஆற்றில் கவிழ்ந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் உயிர் பிழைக்க போராடியுள்ளனர். உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 32 பேர் காயமடைந்துள்ளனர்.

நியூ ஆர்லியன்ஸ் அருகே நேர்ந்த விபத்து

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரை ஒட்டி ஓடும் மிசிசிப்பி ஆற்றில், ‘அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ‘அமெரிக்கன் ஹெரிடேஜ்’ என்ற சொகுசு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. சுமார் 5 மாடிகளைக் கொண்ட இந்த கப்பலில் ஏராளமான பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.

அப்போது, ‘அட்லான்டிக் ஆஸ்பால்ட்’ என்ற பெயருடைய கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பல் அந்த வழியாக வந்துகொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த டேங்கர் கப்பல் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பல் மீது பலமாக மோதியது.

மோதிய வேகத்தில் சேதமடைந்த சொகுசு கப்பல்

டேங்கர் கப்பல் மோதியதில் சொகுசு கப்பலின் நடுப்பகுதி பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மோதலின் தாக்கத்தால் கப்பல் ஆற்றில் கவிழத் தொடங்கியது. இதனால் அதில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு கப்பலில் இருந்து வெளியேற முயன்றனர்.

சொகுசு கப்பலின் ஒரு பகுதி தண்ணீருக்குள் மூழ்கியதால், அதில் இருந்தவர்கள் ஆற்றில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

190 பேர் பத்திரமாக மீட்பு – 32 பேர் காயம்

விபத்து நடந்த நேரத்தில் சொகுசு கப்பலில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் சுமார் 180 முதல் 190 பேர் வரை இருந்ததாக நியூ ஆர்லியன்ஸ் மேயர் ஹெலினா மொரேனோ தெரிவித்துள்ளார்.

மீட்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு கப்பலில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த விபத்தில் 32 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான அளவிலான காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூ ஆர்லியன்ஸ் மேயர் ஹெலினா மொரேனோ கூறுகையில், விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இணையத்தில் பரவும் விபத்து வீடியோ

இந்த பயங்கர விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. அந்த வீடியோவில், கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த டேங்கர் கப்பல், நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலின் நடுப்பகுதியில் மோதுவது தெளிவாக பதிவாகியுள்ளது.

விபத்து நிகழ்ந்த விதம் மற்றும் கப்பல் சேதமடைந்த காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், டேங்கர் கப்பலின் திசை கட்டுப்பாட்டு அமைப்பான ‘ஸ்டீரிங்’ பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க கடல்சார் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்தில் சிக்கிய டேங்கர் கப்பலை அப்புறப்படுத்துவதற்காக கூடுதல் கப்பல்கள் வரவழைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விபத்தைத் தொடர்ந்து மிசிசிப்பி ஆற்றில் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விபத்துக்கான முழுமையான காரணம் விசாரணையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *