International
oi-Prasanna Venkatesh
இஸ்ரேல் – ஈரான் இடையேயான பதற்றம் தணிந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்பாராத புதிய பிரச்சனையை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் சேமிப்பு மையங்களில் கச்சா எண்ணெய் இருப்பு கடுமையாகக் குறைந்துள்ளது. இது, நாட்டின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக எண்ணெய் சேமிப்பு மையமான கஷிங் (Cushing), ஓக்லஹோமாவில் கச்சா எண்ணெய் இருப்பு கடந்த வாரம் 1.6 மில்லியன் பேரல் குறைந்து 20 மில்லியன் பேரலாக சரிந்துள்ளது. இது 2014-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு குறைந்த அளவாகும். கடந்த எட்டு வாரங்களாக தொடர்ந்து குறைந்து வரும் இந்த கச்சா எண்ணெய் இருப்பு, மொத்தம் 8.3 மில்லியன் பேரல் அளவுக்கு சரிந்துள்ளது.

கஷிங் மையம், அமெரிக்காவின் முக்கிய கச்சா எண்ணெய் விலை நிர்ணயிக்கும் இடமாகவும், நாட்டின் மிகப்பெரிய வணிக சேமிப்பு மையமாகவும் செயல்படுகிறது. தற்போது இங்குள்ள இருப்பு, அமெரிக்காவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் இரண்டு நாட்களுக்கும் குறைவான அளவாக உள்ளது.
20 மில்லியன் பேரல்க்கு கீழ் சரிந்தால் என்ன ஆகும்?
கஷிங் மையத்தில் கச்சா எண்ணெய் இருப்பு 20 மில்லியன் பேரல்க்கு கீழ் சரிந்தால், சுத்திகரிப்புக்கா கச்சா எண்ணெயை வெளியேற்றுவது தொழில்நுட்ப ரீதியாக கடினமாகவும், அதிக செலவு பிடிக்கக்கூடியதாகவும் மாறும். மேலும், தண்ணீர் மற்றும் வண்டல் கலந்து எண்ணெயின் தரம் குறையும் அபாயமும் உள்ளது. இது, அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.

1983-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு குறைந்தது
அமெரிக்காவின் மூலோபாய எண்ணெய் இருப்பு (Strategic Petroleum Reserve) தற்போது சுமார் 340 மில்லியன் பேரலாக உள்ளது. இது 1983-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு குறைந்த அளவாகும். போர் காரணமாக எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த, 172 மில்லியன் பேரல் எண்ணெய் வெளியிடப்பட்டதே இந்த சரிவுக்கு முக்கிய காரணம்.
இந்த இரண்டு முக்கிய எண்ணெய் இருப்புகளும் ஒரே நேரத்தில் கடுமையாகக் குறைந்துள்ளது, அமெரிக்காவின் எண்ணெய் சந்தையில் அரிதாகக் காணப்படும் இத்தகைய நிலைமை அந்நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, எதிர்காலத்தில் எண்ணெய் விலை மற்றும் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எண்ணெய் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் உள்நாட்டு எண்ணெய் இருப்பு பிரச்சனை, டிரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
டிரம்ப்-க்கு நெருக்கடி
இந்த பிரச்சனையை சரி செய்யவே டிரம்ப் ஈரான் உடன் வேக வேகமாக போரை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவால் முழுமையாக போருக்கு இறங்க முடியாது என்பது அடுத்த பிரச்சனை. எனவே ஈரான் உடன் சாமாதானமாக போவது தான் சரி என்ற நிலைமைக்கு டிரம்ப் வந்துள்ளது.
ஆனால் இஸ்ரேல் இதை புரிந்துக்கொண்டு ஒரே நேரத்தில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. இஸ்ரேல் தெற்கு லெபனான் மீது தாக்குதல் நடத்தும் காரணத்தால் ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்கு வர மறுத்துள்ளது. இதனால் போரும் சரி, கச்சா எண்ணெய் சப்ளையும் முடங்கியுள்ளது.

