அமெரிக்கா தாக்கினால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிவிடுவோம்.. ஈரான் எச்சரிக்கை! உச்ச கட்ட பதற்றம் | Iran Threatens to Close Strait of Hormuz if US Carries Out Fresh Strikes

Spread the love

International

oi-Mani Singh S

தெஹ்ரான்: போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் ஈரான் மீது இன்று இரவு மிக கடுமையான தாக்குதல் இருக்கும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா தனது தாக்குதலை தொடர்ந்தால், பதிலுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம் என்று ஈரான் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்க் தீவை முழுமையாக கைப்பற்றுவோம் என்று டிரம்ப் மிரட்டிய நிலையில், ஈரான் பதிலடிக்கு தயாராக இருப்பதாக காட்டுவது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா போரை முடிவுக்கு கொண்டு வர கடந்த மாதம் 17 ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் வளைகுடாவில் பதற்றம் தணியத்தொடங்கிய நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அமெரிக்கா கடும் கோபம் அடைந்துள்ளது.

Iran Threatens to Close Strait of Hormuz if US Carries Out Fresh Strikes

ஈரானை எச்சரித்த டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்து இருந்து இருந்தாலும் குறிப்பிட்ட பாதை வழியாக செல்ல மட்டுமே அனுமதி அளிக்கிறது. அதனை மீறினால், அந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், நேற்று முன் தினம் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தபட்டது. கப்பல்கள் மீதான தாக்குதலால் கோபம் அடைந்த அமெரிக்கா, ஈரானின் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

அமெரிக்க தாக்குதலால் ஈரான் துறைமுகம் பற்றி எரிந்தது. ஈரானில் 60-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதையடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த டிரம்ப், இன்றும் கடுமையான தாக்குதல் இருக்கும் என்று ஈரானை எச்சரித்து இருந்தார்.

ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவோம்

இதற்கிடையே, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பின்வாங்கப்போவது இல்லை எனவும் அதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் பாதுகாப்பு படை வட்டாரத்தில் கூறப்பட்டதாக அந்த நாட்டின் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:-

ஹார்முஸ் ஜலசந்தியை தனது சொந்த ஏற்பாடுகளின்படியே மீண்டும் திறக்கும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் நிர்ணயித்துள்ள நடைமுறைகளை தாண்டி எந்த புதிய வழித்தடத்தையும் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் எதுவும் மீண்டும் நடத்தப்பட்டால் ஹார்முஸ் ஜலசந்தியும் மூடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

மீண்டும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும்

போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், மேற்காசிய போர் மீண்டும் முழு வீச்சில் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறுவதால், அந்த வழித்தடம் மூடப்பட்டால் மீண்டும் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செயல்கள் மூலம் பதிலளிப்போம்

இதற்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கை குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில், “நாகரிகமும் துணிச்சலும் கொண்ட ஈரான் மக்களை இழிவான வார்த்தைகளால் பேசுவது, அவர்களின் மகத்துவத்தை எந்த வகையிலும் பாதிக்காது. நாகரிகம், கலாசாரம் மற்றும் உயர்ந்த ஒழுக்க நெறிகளுக்காக ஈரானியர்கள் அறியப்பட்டவர்கள்.

எனவே, நாங்கள் தரக்குறைவான பேச்சுக்கு அதேபோன்ற வார்த்தைகளால் பதிலளிக்க மாட்டோம். அச்சம் எதுவும் இன்றியும், மிகவும் துணிவாகவும் செயல்கள் மூலம் பதிலளிப்போம்” என்று கூறியுள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையேயான இந்த மோதல் மத்திய கிழக்கில் மீண்டும் உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *