அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள் சர்வதேச அரசியல் மற்றும் நிதிச் சந்தைகளில் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாகச் சென்னையிலும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் அரசுப் பத்திரங்களின் வருவாய் விகிதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தங்கத்தின் விலை உயர்வுக்குச் சாதகமாக அமைந்துள்ளன. அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையும் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை நிலவரம்!
சென்னையில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வார இறுதியில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைந்த தங்கம், இந்த வாரத் தொடக்கம் முதலே மீண்டும் உயரத் தொடங்கியது.
நேற்று (நவம்பர் 3) ஒரு சவரன் ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,600-க்கு விற்பனையானது.
இன்று காலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ.1,02,600-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,825-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், காலையில் உயர்ந்த தங்கம் விலை, அதன்பிறகு மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. தற்போது சவரனுக்கு மேலும் ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும், கிராமுக்கு ரூ 275 உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13,100 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை!
வெள்ளி விலையில் இன்று காலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கு விற்பனையான நிலையில் தற்போது வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

