அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்: 6,600 விமானங்கள் ரத்து, 8,600 தாமதம்! என்ன நடந்தது? / 6,600 US Flights Cancelled, 8,600 Delayed: What Happened?

Spread the love

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் Federal Aviation Administration (FAA), நவம்பர் 13-ஆம் தேதி நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை விதித்தது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களின் தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

என்ன நடந்தது?

அமெரிக்காவின் 22 பிராந்திய (Region)விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களை இணைக்கும் தொலைத்தொடர்பு அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விமானங்களைக் கண்காணித்து வழிநடத்தும் தகவல்கள் சீரற்ற முறையில் கிடைத்தன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு FAA அனைத்து அமெரிக்க விமான நிலையங்களிலும் புறப்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டது. ஏற்கெனவே வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன.

எத்தனை விமானங்கள் பாதிக்கப்பட்டன?

ஆரம்பகட்டத்தில் 481 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது திட்டமிட்ட நேரத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் புறப்பட முடியவில்லை. ஆனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தது.அதன் பின்னர் வந்த தகவலின்படி, 6,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 8,600 விமானங்கள் தாமதமடைந்தன. 827 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாக Associated Press தெரிவித்துள்ளது

சைபர் தாக்குதலா?

இதுவரை சைபர் தாக்குதலுக்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் Markwayne Mullin தெரிவித்தார். பழைய விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பில் புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய சுமை காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இறுதிக் காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை. முன்னதாக ஏற்பட்ட Microsoft சேவை முடக்கத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று Microsoft தெரிவித்தது.

அமெரிக்க போக்குவரத்துத் துறைச் செயலர் சொல்வது என்ன?

அமெரிக்க போக்குவரத்துத் துறைச் செயலர் Sean Duffy, தனது X பதிவில்,

பழமையான விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள Router-கள் அதிகப்படியான தரவுச் சுமையால் பாதிக்கப்பட்டு, சீரற்ற தகவல்களை வழங்கியதாக விளக்கினார். இதனால் பாதுகாப்பு கருதி சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பை முழுமையாகப் புதுப்பிக்க காங்கிரஸிடம் கூடுதல் நிதி தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிலை என்ன?

அமெரிக்க நேரப்படி நவம்பர் 13 இரவு 8.30 மணிக்கு FAA நாடு தழுவிய விமானப் புறப்பாட்டுத் தடையை நீக்கியது. இருப்பினும், விமானங்களும் பணியாளர்களும் வெவ்வேறு இடங்களில் சிக்கியிருப்பதால் இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் அமெரிக்க விமான நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *