அமைச்சர் கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சு? அறுவை சிகிச்சை நடந்துருக்கா? கனிமொழி சொல்வது என்ன?  – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் லண்டன் சென்றிருந்தார். இந்தப் பயணத்தில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கீர்த்தனாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்ததாகவும், சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அவரது உடல்நிலை குறித்த தகவலை வெளிப்படையாக தெரிவிக்க முடியாத சூழல் இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கீர்த்தனாவின் உடல்நிலை குறித்து கனிமொழி சந்தோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://x.com/Kanimozhi_tvk/status/2102272528362201421?s=20

அதில், கீர்த்தனாவுக்கு காலர் எலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததாகவும், அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் நீண்ட நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கீர்த்தனா சில நாட்களிலேயே மீண்டும் தனது பணிகளைத் தொடங்கியதாக கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்துக்கான தொழில் முதலீட்டு சந்திப்புகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை அவர் கவனித்து வந்ததாகவும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், கீர்த்தனாவின் உடல்நிலை தொடர்பாக எதிர்க்கட்சியினர் தெரிவித்த கருத்துகளையும் தனது பதிவில் கனிமொழி சந்தோஷ் விமர்சித்துள்ளார். ஒரு பெண் அரசியல் பணியில் இல்லாததற்கான காரணத்தை அவரது உடலியல் சார்ந்த விஷயங்களுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பேசுவது பிற்போக்கான அணுகுமுறை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் தனிப்பட்ட உடல்நிலை மற்றும் உடலியல் சார்ந்த விஷயங்களை அரசியல் விவாதத்துக்குள் கொண்டு வருவதற்கு பதிலாக, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பணிச்சுமையையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் வலி மற்றும் சிகிச்சை தொடர்ந்த நிலையில் கீர்த்தனா மீண்டும் பணிக்குத் திரும்பி நிறுவன பிரதிநிதிகளுடன் சந்திப்புகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டதாகவும் கனிமொழி சந்தோஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கீர்த்தனா தனது உடல்நிலை குறித்த விஷயத்தை பொதுவெளியில் பகிர விரும்பவில்லை என்பதை அறிந்திருந்தும், அவரைப் பற்றிய உண்மையான நிலையை தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் கனிமொழி சந்தோஷ் கூறியுள்ளார்.

கீர்த்தனாவின் உடல்நிலை குறித்த இந்தப் பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *