“சமையல் தெரியும்… அதை வைத்து என்ன செய்ய முடியும்?’ என்று பலரும் யோசித்திருக்கலாம். ஆனால், பல ஆண்டுகளாக வீட்டுக்காக மட்டுமே பயன்படுத்திய சமையல் திறமையைத் தொழிலாக மாற்றி, இன்று கோடிகளில் வருமானம் ஈட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் பீகாரைச் சேர்ந்த தேவ்னி தேவி.
16 வயதிலேயே திருமணம். 25 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கை. வீட்டில் உள்ள அனைவருக்கும் தினமும் உணவு தயாரிப்பது அவரது பொறுப்புகளில் ஒன்றாக இருந்தது.

எத்தனை பேருக்கு எவ்வளவு சமைக்க வேண்டும், தேவையான பொருள்களை எப்படித் திட்டமிட வேண்டும் எனப் பல ஆண்டுகளாகக் கற்றுக்கொண்ட அனுபவம், பின்னாளில் அவருக்கே தெரியாமல் ஒரு தொழில் திறனாக மாறியிருக்கிறது.
2002-ல் குழந்தைகளின் கல்விக்காக பாட்னாவுக்கு வந்தபோது, அவரது வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அங்கு மருத்துவ மாணவர்களின் உணவுப் பிரச்னையைக் கவனித்துள்ளார்.
வீட்டுச் சாப்பாட்டைப் போலத் தரமான உணவு கிடைக்காமல் பல மாணவர்கள் சிரமப்படுவதைப் பார்த்த தேவ்னி, அவர்களுக்காகச் சமைக்க முடிவு செய்தார்.