ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, தவெக அமைச்சரவையில் முதல்முறையாக பெரிய மாற்றத்தைச் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், காங்கிரஸைச் சேர்ந்த ஒரு அமைச்சர் உட்பட, தற்போதைய அமைச்சர்கள் 4 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், குறைந்தது 3 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும் கோட்டை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அதாவது, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் செயல்திறன் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாகவு, இந்த ரகசிய அறிக்கையின் அடிப்படையில், உயர்கல்வித்துறை அமைச்சரான பி. விஸ்வநாதன், போக்குவரத்துறை அமைச்சர் ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி, மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டி. சரத்குமார் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை இழக்க நேரிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திறனை உயர்த்த மாற்றங்களை செய்ய தலைமை திட்டமிட்டுள்ளதாம். இவ்வறிக்கையின் பரிந்துரையின் பேரில் சர்ச்சைக்குரிய அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் எஸ். கமாலி ஆகியோரின் துறை சார்ந்த செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வேறு இலாகாக்கள் ஒதுக்கப்படவுள்ளனவாம்.
இதில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு இலாகா மாற்றப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் கவனத்தை பெற்று வருகிறது. அதாவது, 29 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராகி, பின்னர் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்ற கீர்த்தனா, இளம் தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக அரசியலில் கவனம் பெற்றார். ஆனால், அமைச்சர் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அவரது செயல்பாடுகள் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களை சந்தித்தார்.
அரசு வாகனம் பயன்படுத்திய விவகாரம், அதிகாரிகளுடன் அணுகுமுறை குறித்து விமர்சனம், அமைச்சர் ஜெகதீஸ்வரியுடனான புரோட்டோகால் சர்ச்சை, செய்தியாளர்கள் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், செய்தியாளர்களிடமே எதிர்கேள்வி எழுப்பிய அணுகுமுறை, பள்ளி ஆய்வின் போது எழுந்த சர்ச்சை என அடுத்தடுத்து தவெக அரசுக்கு பிரச்னை மேல் பிரச்னையை உருவாக்கினார். கடைசியாக திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, மாணவியின் ஆங்கிலத் திறனை பொதுவெளியில் சோதித்த சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியது. மாணவியிடம் கேள்விகள் எழுப்பி, அவரது பதில்களை விமர்சித்ததுடன், ஆசிரியரின் கற்பித்தல் முறையையும் கேள்விக்குள்ளாக்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தவெக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இப்படி சர்ச்சைக்குரிய அமைச்சராக உருவெடுத்துள்ள அமைச்சர் கீர்த்தனாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென்று குரல்கள் எழுந்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது இலாகாவை மட்டும் மாற்ற தலைமை முடிவெடுத்துள்ளதாம்.
கீர்த்தனாவைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் காங்கிரஸின் எஸ். ராஜேஷ் குமார், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வேறு துறைக்கு மாற்றப்படலாம் எனவும், கூட்டணி கட்சியான விசிகவைச் சேர்ந்த வன்னி அரசுவுக்கு வேறு முக்கிய அமைச்சரவை பொறுப்பு வழங்கப்பட பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.

