”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

Spread the love

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் இன்று திறக்கப்பட்டது. நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தனது இருக்கையில் அமர்ந்த ஜவாஹிருல்லாவை திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஜவாஹிருல்லா

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜவாஹிருல்லா, “தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 5 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. 3 வயது குழந்தை இறந்துள்ளது, வேதனையை ஏற்படுத்துகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படை இருந்தும், போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அதிகரித்து விரைந்து வழக்குகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக போட்ட சாலையில் பயணித்து, திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் தயவால் வெற்றிபெற்று அமைச்சராக இருக்கும் ஷாஜஹான், திமுகவிற்கு எதிராக இப்படி பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு. நல்ல ஷாஜகான் மும்தாஜுக்கு கல்லறை கட்டினார், இந்த ஷாஜஹான் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு சமாதி கட்டும் வேலைகளை செய்து வருகிறார். சிறுபான்மையினர் வாக்கு திமுகவிற்கு கிடைக்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்படும் சதி. இஸ்லாமியர்கள் நிறைந்த தொகுதிகளில் திமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தது, டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது இஸ்லாமியர்கள் திமுக மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு ஒரு சான்று.

அமைச்சர் ஷாஜஹான்

இஸ்லாமியர்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெறமுடியவில்லை என்பதே உண்மை. தவெக தேர்தல் அறிக்கையில் கொடுத்த ஒரு வாக்குறுதி கூட இதுவரை நிறைவேற்றவில்லை. அழுத்தம் கொடுத்த காரணத்தால் மட்டுமே கடந்த திமுக அரசு கொண்டுவந்த ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறது. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படாத காரணத்தால் விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர் ஆகவே குறுவை சாகுபடி செய்வதற்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *