தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்குமான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.அதன்படி இந்த ஆண்டு மொத்தம் வேலை நாட்கள் 210 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 22 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக உள்ளன. மேலும் இந்த ஆண்டில் பெரும்பாலான சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17-ந்தேதி முதல் தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 26-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து டிசம்பர் 24-ந்தேதி தொடங்கி 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை ஆகும். புத்தாண்டிற்கு பின்னர் ஜனவரி 4-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
செப்டம்பர் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால், அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களாக அமைகிறது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. தொடர்ந்து, செப்டம்பர் 14 (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால், அதற்கு முன்னர் இருக்கும் வார விடுமுறையுடன் சேர்ந்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது.
அக்டோபர் மாதத்தில் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய்) ஆயுத பூஜை, விஜய தசமி வருவதால், அதற்கு முன்னர் இருக்கும் வார விடுமுறையுடன் சேர்ந்து, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
நவம்பர் மாதம் 8-ந்தேதி கொண்டாடப்படும் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், வார விடுமுறையாக 2 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது. மேலும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் கொண்டாடப்படுவதால், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது.
இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாள் 2027 ஏப்ரல் 23-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன் தொடர்ச்சியாக, 2027 ஏப்ரல் 24-ந் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கும் எனப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. 2026-27-ம் கல்வி ஆண்டில் மொத்தம் 365 நாட்களில் வேலை நாட்கள் 210 நாட்களாகவும், விடுமுறை நாட்கள் 155 ஆகவும் உள்ளன. இதில், ஜூலை 19, செப்டம்பர் 19, டிசம்பர் 19 ஆகிய 3 சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.



