“அரசியல் தற்கொலை..” நெதன்யாகுவுடன் சேர முடியாது.. ஆனா வேற வழியும் இல்லையே.. கைகளை பிசையும் ஐசென்கோட் | Israel Election Deadlock: Netanyahu and Eisenkot Race to Form Government After No Clear Majority

Spread the love

International

oi-Vigneshkumar

ஜெருசலேம்: இஸ்ரேலில் நடந்த முடிந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், ஒரு பக்கம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், இன்னொரு பக்கம் முதல்முறையாக ஆட்சியில் அமரும் முனைப்பில் ஐசென்கோட்டும் போட்டி போட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல வாரம் ஆன பிறகும் கூட அங்கு யாராலும் ஆட்சியை அமைக்க முடியவில்லை.

மத்திய கிழக்கை பொறுத்தவரை அங்கு மிக முக்கிய நாடு என்றால் இஸ்ரேல். அதன் ஒட்டுமொத்த சைஸ் தமிழ்நாட்டின் அளவில் 6ல் ஒரு பகுதி தான். இருந்தாலும் அணு ஆயுதம் கொண்ட நாடாகவும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகவும் இருப்பதால் இஸ்ரேல் மிக முக்கியமான நாடாக இருக்கிறது. இதனால் அங்கு ஆட்சியில் இருப்பது யார் என்பது மிக முக்கிய கேள்வியாக இருக்கிறது.

Israel Election Deadlock Netanyahu Israel Eisenkot

ஈரான்

இப்போது ஈரான் உடன் போர் பதற்றம் இருந்தாலும் கூட அங்கு கடந்த அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், இந்த தேர்தலில் எந்தவொரு கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து முன்னாள் ராணுவ தலைமை தளபதியும் தற்போதைய எதிர்க்கட்சியாகவும் உள்ள ஐசென்கோட் தனது தலைமையில் அரசு அமைக்க முயன்று வருகிறார். அவருக்கு டிசம்பர் 6ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் 14 நாட்கள் அந்த அவகாசம் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது.

பேச்சுவார்த்தை

இந்த சூழலில் தான் ஐசென்கோட்டின் யாஷர் கட்சிக்கும் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கும் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹெர்ஸ்லியாவில் உள்ள ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் நான்கு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பல்வேறு முக்கிய விவகாரங்களில் இரு தரப்பினரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதற்கு முன்பும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஐசென்கோட் தலைமையிலான அணியில் 48 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, தீவிர யூத மத குழுக்களின் ஆதரவை பெறுவதா, அரபு கட்சிகளுடன் இணைவதா அல்லது நெதன்யாகுவின் லிகுட் கட்சியுடன் அரசை அமைப்பதா என்ற விவாதம் அங்கு நீடிக்கிறது.

அரசியல் தற்கொலை

நெதன்யாகு தேசிய ஒற்றுமை அரசை அமைக்க விரும்புகிறார். அதில் நெதன்யாகுவும் ஐசென்கோட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு மாறி மாறி பிரதமர் பதவியில் இருக்கலாம் என்பதே அவரது விருப்பம். இதுபோன்ற அதிகார பகிர்வு முறை ஏற்கெனவே இஸ்ரேலில் நடைமுறையில் இருந்துள்ளது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் நெதன்யாகுவுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஐசென்கோட் தயக்கம் காட்டுகிறார். நெதன்யாகுவை எதிர்த்தே அவர் தனது தேர்தல் முழுக்க பிரச்சாரம் செய்தார். அப்படியிருக்கும்போது அவருடன் ஆட்சி அமைப்பது அரசியல் தற்கொலையாக இருக்கும் என அவர் கருதுகிறார்.

நிபந்தனைகள்

நெதன்யாகு தரப்பும் கூட முழு ஆதரவை எல்லாம் தரவில்லை. பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறார்கள். முதலில் நெதன்யாகு மற்றும் அவரது அரசுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களும் வெறுப்புப் பேச்சுகளும் நிறுத்தப்பட வேண்டும். அடுத்து யூத நாடாக இஸ்ரேல் இருப்பதை ஆதரிக்கும் கட்சிகள் மட்டுமே அரசில் இடம்பெற வேண்டும் என்றும் அரபு கட்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாலஸ்தீனத்தை நிராகரிப்பது, சிரியா, லெபனான், காசா பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதல்களை தொடர்வது என பல நிபந்தனைகளை போடுகிறது.

இதனால் இஸ்ரேலில் ஒரு தெளிவில்லாத சூழலே நிலவுகிறது. அதேநேரம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை கடத்த அனுமதிக்க மாட்டேன் என்று ஐசென்கோட் எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சிகளை மட்டும் இணைத்து முதலில் சிறுபான்மை அரசை அமைத்து, பின்னர் அதன் ஆதரவை விரிவுபடுத்தும் திட்டத்தையும் அவர் பரிசீலிப்பதாக தெரிகிறது. இப்படி சிக்கல் மேல் சிக்கல் இருப்பதால் இஸ்ரேலில் புதிய அரசு அமைவது மேலும் சிக்கலாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *