இந்த அரசு அப்படி இருக்காது என நினைத்துதான் நாங்கள் விஜய்க்கு வாக்களித்தோம். விஜய்யும் அவருடைய நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத்தை மீனவர் நலத்துறையின் அமைச்சர் ஆக்கினார். முதலில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இனி மீனவர்களின் பிரச்னைகளை ஸ்ரீநாத் மூலம் முதல்வருக்கு நேரடியாக எடுத்துச் செல்ல முடியும் என நினைத்தோம்.

ஆனால், ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் ஸ்ரீநாத் இந்தத் துறையின் மீது பெரிய அக்கறை காட்டவே இல்லை. கச்சத்தீவு விவகாரத்தை பற்றி கேட்கையில், அதன் பின்னணியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உணர்வையும் புரியாமல் ‘நோ கமெண்ட்ஸ்‘ எனக் கூறிவிட்டு கடந்து சென்றார். அப்போதே நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிராக 9 மீனவ கிராமத்தினர் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ‘முதல்வர் மீனவர்களுடன்தான் நிற்பார்’ என அமைச்சர் ஆதவ் பேசுகிறார். ஆனால், எங்களுடன் நிற்க வேண்டிய அமைச்சர் ஸ்ரீநாத் எங்கே? பட்டினப்பாக்கம் கிராமங்களை பெயருக்குக் கூட எட்டிப்பார்க்கவில்லை.
இப்போது காசிமேட்டில் ஆந்திர கடல்படையினர் பிடித்து வைத்திருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கோரி அத்தனை மீனவர்களும் கடந்த சில நாட்களாக ஸ்ட்ரைக்கில் இருந்தோம். ஆயிரக்கணக்கான படகுகள் தொழிலுக்கு செல்லாமல் கரையில் நிற்கின்றன.