அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கடந்த 11ம் தேதி சுமார் இரண்டு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது மூடியிருந்த டாஸ்மாக் கடை மீது கல் வீசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீஸார் டாஸ்மாக் கடை முன்பு திரண்டிருந்தவர்களை விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, சில மாணவிகளை போலீஸார் அடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. சில மாணவிகள் தரையில் படுத்து கொண்டிருக்க அங்கிருந்த பெண்கள் அதிர்ச்சியும், ஆக்ரோஷமுமாக பேசினர். இது குறித்து வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் போலீஸ் யாரையும் அடிக்கவில்லை, போராட்டத்தை கவனப்படுத்த போலீஸார் அடித்து விட்டதாக சொல்கிறார்கள் என்று ஒரு தரப்பும், போலீஸ் அடித்ததில் பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டதாக போராட்டக் குழு தரப்பிலும் பேசப்படுவதால் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.