விஜய் VS சஞ்சய்..! விட்டுக் கொடுக்காத தந்தை… விட்டு விலகிய மகன்…!  – Kumudam

Spread the love

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதால், ‘சிக்மா’ மீது ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஜூலை 31-ஆம் தேதி வெளியீட்டை முன்னிட்டு படக்குழு விளம்பரப் பணிகளையும் தொடங்கியிருந்தது.

ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, ‘சிக்மா’ திரைப்படம் திட்டமிட்டபடி ஜூலை 31-ஆம் தேதி வெளியாகாமல், ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கான முக்கிய காரணமாக விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு கருதப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் தொடர்ந்து தாமதமாகி வந்தது. நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, கடந்த வாரம் அந்தப் படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து, படம் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

‘ஜனநாயகன்’ திரைப்படம் விஜய்யின் அரசியல் பயணத்துக்குப் பிறகு வெளியாகும் முக்கியமான படமாக இருப்பதால், தமிழகம் முழுவதும் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதனால், பெரும்பாலான முக்கிய திரையரங்குகள் ‘ஜனநாயகன்’ படத்திற்காக ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், ஜூலை 31-ஆம் தேதி ‘சிக்மா’ வெளியாகும் பட்சத்தில் போதிய திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். மேலும், விஜய் நடித்த படம் மற்றும் அவரது மகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் சூழல் தேவையற்ற ஒப்பீடுகளையும், வசூல் போட்டியையும் உருவாக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால், நேரடி மோதலைத் தவிர்க்கும் வகையில் ‘சிக்மா’ படத்தை ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றுவது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகள் எதிர்பார்த்த அளவில் தீவிரமாக நடைபெறவில்லை என்பதையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். டீசர், டிரெய்லர், இசை வெளியீடு உள்ளிட்ட முக்கிய விளம்பர நடவடிக்கைகளில் அமைதி நிலவுவதால், ரிலீஸ் தள்ளிப்போகும் தகவலுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

இருப்பினும், ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறதா என்பது குறித்து படக்குழு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் புதிய ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *