'அவதூறு, உண்மைக்குப் புறம்பானவை; என் ராஜினாமாவின் ஒரே நோக்கம்.!'- மீண்டும் எல்.முருகன் விளக்கம்

Spread the love

மத்திய இணையமைச்சராக இருந்த எல்.முருகன் சில வாரங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அவரது ராஜினாமா குறித்து பல்வேறு கருத்துகள் வெளியான நிலையில் அறிக்கை மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“முனைவர் எல். முருகன் ஆகிய நான், 13.10.2026 அன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும், மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பதவியிலிருந்தும் விலக பிரதமரிடம் அனுமதி கோரி, அவரின் அனுமதி பெற்றதும் எனது ராஜினாமாவைச் சமர்ப்பித்தேன்.

எனது ராஜினாமாவின் ஒரே நோக்கம், 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மேம்படுத்தி, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும்.

எல்.முருகன்
எல்.முருகன்

நாட்டின் குடிமக்களின் நலனுக்காகவும், குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மக்கள் பணியை மேற்கொள்ளும் எனது பொறுப்பை ஆதாரமாகக் கொண்டு, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை இணைத்து, தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

மேலும், தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துவது எனது கடமையாகும். இதன் மூலம், தமிழ்நாடு மக்களின் நலன்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு எந்த அளவிற்குத் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும்.

கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மேம்படுத்தும் நோக்கில் நான் மேற்கொண்டுள்ள தற்போதைய பொறுப்பு ஏற்றுக்கொண்டவர்கள் குறித்தும், பல்வேறு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாகத் தேவையற்ற மற்றும் இழிவான கருத்துகளைத் தெரிவித்து, அவற்றைப் பரப்பி வருகின்றனர். இத்தகைய கருத்துகள் அவதூறானவை மட்டுமல்ல, வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையும் ஆகும்.

இத்தகைய கருத்துகள் அனைத்தும் எவ்வித ஆதாரமும் அற்றவை; முற்றிலும் புனையப்பட்டவை; தீய உள்நோக்கம் கொண்டவை; அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்டவை ஆகும். நான் கடின உழைப்பின் மூலம் பெற்றுள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காக, எனது ராஜினாமா குறித்துப் பல்வேறு தவறான அர்த்தங்கள் கற்பித்து, பொதுமக்களிடையே குழப்பத்தை உருவாக்குவதுமே இவற்றின் ஒரே நோக்கமாகும்.

எல்.முருகன்
எல்.முருகன்

நான் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன். அன்றாடக் கூலி வேலை செய்து, கால்நடைகளை மேய்த்து வந்த எனது பெற்றோர், இன்றும் கொணூர் கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். தாங்கள் மகன் ஒருநாள் மத்திய அரசில் அமைச்சராகப் பணியாற்றுவான் என்று அவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். தேசியவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் இணைந்து பணியாற்றிய காலத்தில், எப்போதும் தேசம், கொள்கைகளுக்கு முக்கியம் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.

தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையத்தின் துணை தலைவராகப் பணியாற்றியபோது, நாடுமுழுவதும் குறிப்பாகத் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுத்தது முக்கிய தருணங்கள். மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய இணையமைச்சராக இரண்டு முறை பணியாற்ற எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் என அனைத்தும் என் மீதான பிரதமர் அவர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடே காரணமாக அமைந்தது. தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள், மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஆகிய அமைச்சகங்களில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, நமது நாட்டையும் அதன் மக்களையும் குறித்த எனது புரிதலை விரிவுபடுத்தியது.

கொடை, கருணை, நேர்மையான ஆட்சி மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு ஆகிய நான்கு பண்புகளைக் கொண்ட அரசர், அரசர்களுக்கெல்லாம் ஒளிவிளக்காகத் திகழ்வார் என்ற வள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ், அவரது அமைச்சரவையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய காலம் என் வாழ்வின் முக்கிய தருணம். பிரதமர் அவர்களின் பொறுமை, கருணை மற்றும் அசாதாரணமான அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை மிக நெருக்கமாகக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

தமிழ்நாட்டின் மீது பிரதமர் அவர்கள் கொண்டுள்ள அக்கறையை தனிப்பட்ட முறையில் நான் நேரில் கண்டவன். சென்னை மெட்ரோ திட்டம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், நெடுஞ்சாலைத் திட்டங்கள், அமிர்த பாரத ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் 26 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்வது என மத்திய அரசின் திட்டங்கள் அதற்குச் சான்று. அதுபோலவே தமிழகத்தைப் பாதிக்கக்கூடிய எந்த ஒரு பிரச்சினை என்றாலும், பிரதமர் அவர்களை நான் அணுகியபோதெல்லாம், அந்தப் பிரச்சினைக்கு அவசர முக்கியத்துவம் அளித்து விரைவாகத் தீர்வு காண்பார்.

எல்.முருகன்
எல்.முருகன்

தில்லியில் எனது இல்லத்திற்கு மூன்று முறை வந்து பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்ற பிரதமர் அவர்களின் வருகையை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் மீதான பிரதமரின் அன்பு தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் அளவற்ற பெருமையைத் தருகிறது. பிரதமர் அவர்களை நான் சந்தித்த ஒவ்வொரு தருணத்திலும் திருக்குறள் மீதான தமது காதலை அவர் வெளிப்படுத்துவார். புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின், செங்கோல் நிறுவப்பட்டிருப்பது தமிழர்களின் இதயங்களில் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

கடுமையாக உழைக்கும் கட்சித் தொண்டர்களை பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களும், பாஜக தலைமையும் தொடர்ந்து அங்கீகரித்து வருவது, ஒவ்வொரு கட்சித் தொண்டருக்கும் வலிமையையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறது. குடும்பப் பின்னணி எதுவாக இருந்தாலும், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் சேவை மனப்பான்மை உள்ள ஒவ்வொருவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. கட்சியிலிருந்தும் பிரதமரிடமிருந்தும் நான் பெற்ற அனைத்தும், எனது பொறுப்புணர்வை மேலும் அதிகரித்து வருகின்றன.

எனவே, தற்போது தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் முழுநேரமாக என்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளேன். 2029 மக்களவைத் தேர்தலுக்காகக் கட்சியைத் தயார்படுத்தும் பணியில், மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து எனது முழு நேரத்தையும் ஆற்றலையும் செலவிடவுள்ளேன். ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, மக்களைச் சந்தித்து, நமது கட்சித் தொண்டர்களுக்குத் துணையாக நின்று, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சியின் செல்வாக்கை அமைப்புரீதியாக விரிவுபடுத்தும் பணியில் முழுமையாக ஈடுபடவுள்ளேன். அனைவருடனும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை (Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas) என்ற பிரதமரின் செய்தியை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்கும், வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன்.

2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்துவதற்காக, அனைத்து நிலைகளிலும் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவதே எனது ராஜினாமாவின் ஒரே நோக்கமாகும். அரசியல் உள்நோக்கத்துடனும் தீய எண்ணத்துடனும் சிலரால் முன்வைக்கப்படும் பிற குற்றச்சாட்டுகளும் தேவையற்ற அவதூறு பிரசாரங்களும் உண்மைக்குப் புறம்பானவை.

இத்தகைய கருத்துகளைப் பரப்புவது, எனது நற்பெயருக்கும் மதிப்பிற்கும் களங்கம் விளைவிக்கும் அவதூறுச் செயலாகும். மேலும், இவை பிற தனிநபர்களையும் பாதிக்கக்கூடியவை. இதன் மூலம், தமிழ்நாட்டு மக்களிடையே தேவையற்ற அமைதியின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் பரந்த நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

மத்திய அமைச்சர் எல்.முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகன்

இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, எனது ராஜினாமா தொடர்பாக டிஜிட்டல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து உள்ளடக்கங்கள், பதிவுகள் மற்றும் பிரசாரங்களையும் உடனடியாக நீக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், எவ்வித ஆதாரமுமின்றி, பொறுப்பற்ற முறையிலும் தீய உள்நோக்கத்துடனும், எனது நற்பெயருக்கும் மதிப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கோருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

ஊடகத் துறையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட நபர்கள், சமூக ஊடகப் பக்கங்களின் நிர்வாகிகள், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், இத்தகைய அவதூறான உள்ளடக்கங்களை ஏதேனும் வெளியிட்டிருந்தால் அவற்றை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனைச் செய்யத் தவறினால், எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான, அவதூறான மற்றும் இழிவான பிரசாரங்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக, அவரவர் சொந்தச் செலவில், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட விளக்கத்தின் மூலம் இந்த விவகாரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக நம்புகிறேன். எனது ராஜினாமாவின் அடிப்படை நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவையாற்றுவதும், கட்சியை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்தி வளர்ச்சி அடையச் செய்வதுமே ஆகும் என்பதைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்” என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *