அவதூறு வழக்கு; `யூடியூபர் துருவ் ராட்டிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட்'- நீதிமன்றம் உத்தரவு

Spread the love

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, விகாஷ் பாண்டே என்பவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டி யூடியூபர் துருவ் ராட்டி 2018ம் ஆண்டு காணொளி வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக விகாஷ் பாண்டே 2018-ஆம் ஆண்டு தொடர்ந்த அவதூறு வழக்கில், துருவ் ராட்டிக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டைப் (NBW) பிறப்பித்துள்ளது. 2018-ஆம் ஆண்டு மே மாதம் ராட்டி வெளியிட்ட ஒரு காணொளியில், பாஜக-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, விகாஷ் பாண்டேவுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதில் குற்றம் சாட்டியிருந்தார். “BJP IT Cell Part II” என்ற தலைப்பில் வெளியான வீடியோவில், ராட்டி தனக்கு எதிராக பொய்யான மற்றும் அவதூறான கூற்றுகளை கூறியதாக விகாஷ் பாண்டே குற்றம்சாட்டி இருந்தார். ராட்டியின் சமூக ஊடகக் கணக்கில் பகிரப்பட்ட இந்தக் காணொளியை, அப்போது டெல்லியின் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பகிர்ந்திருந்தார்.

இந்தக் காணொளியை தொடர்ந்து, ராட்டி மற்றும் கெஜ்ரிவால் ஆகிய இருவர் மீதும் பாண்டே அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் ஏற்கெனவே ராட்டிக்கு கடந்த மாதம் 17ம் தேதி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பான சம்மனை கொடுக்கச் சென்ற போது ராட்டியின் வீடு பூட்டி இருந்தது. புதிதாக மீண்டும் கடந்த 31ம் தேதி புதிய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டபோது ராட்டியின் ஹரியானா வீட்டு முகவரிக்கு வாரன்ட் அனுப்பும்படி நீதிபதி கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ​​ராட்டியின் வழக்கறிஞர், அந்த யூடியூபர் வழக்கமாக ஆஸ்திரியாவில் வசிப்பவர் என்றும், டெல்லியில் நடைபெற்ற ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டங்களில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியா வந்திருந்தார்’ என்றும் தெரிவித்தார். 2019ம் ஆண்டு ராட்டிக்கு இதே விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டதையும் நீதிமன்றம் நினைவுபடுத்தியது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சமக்‌ஷ் சர்மா, ராட்டி பெரும்பாலும் வெளிநாட்டிலேயே வசித்து வருவதால், பல ஆண்டுகளாக அவருக்கு சம்மன் வழங்கப்படாமல் இருக்கிறது என்று வாதிட்டார்.

வழக்கு விசாரணையை விரைவுபடுத்தவும், யூடியூபருக்கு சம்மன் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரினார். இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராட்டிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

யார் விகாஷ் பாண்டே?

விகாஷ் பாண்டே பேஸ்புக்கில் ‘ஐ சப்போர்ட் நரேந்திர மோடி’ என்ற முகநூல் பக்கத்தை தொடங்கியவர் ஆவார். அதோடு சமூக ஆர்வலராகவும் இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *