ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அதிகாரக் களத்தில் யார் கரம் ஓங்கியிருக்கிறது என்பதை ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சர்வதேச கொள்கை ஆய்வு நிறுவனமான ‘லோவி இன்ஸ்டிடியூட்’ (Lowy Institute), தனது “2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’ (Asia Power Index 2026) அறிக்கையை வெளியிட்டு சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா தனது 3-வது இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இடைவெளி வரலாறு காணாத அளவுக்குச் சுருங்கியிருப்பதுதான் இந்த ஆண்டின் ஹாட் டாபிக்!

அமெரிக்கா Vs சீனா: குறைந்த இடைவெளி!
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பொருளாதாரம், ராணுவ பலம், ராஜதந்திர செல்வாக்கு உள்ளிட்ட 8 முக்கிய அளவுகோல்களின் கீழ், 131 குறியீடுகளைக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா 78.9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சீனா: 73.6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா: 40.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தைத் தக்கவைத்துள்ளது (கடந்த ஆண்டை விட 0.5 புள்ளிகள் அதிகம்). ஜப்பான்: 38.6 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
2018-ம் ஆண்டு இந்தக் குறியீடு தொடங்கப்பட்டதிலிருந்து இல்லாத அளவிற்கு, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 5.3 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ராணுவத் திறனிலும் சீனா, அமெரிக்காவின் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு நெருங்கிவிட்டது.
மோடியின் ‘பிராந்திய’ பாய்ச்சலும், ‘உலகளாவிய’ சறுக்கலும்!
இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவின் ஒட்டுமொத்த அதிகாரம் நம்மை விட அதிகமாக இருந்தாலும், 2018-க்குப் பிறகு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அதிகார இடைவெளி மிகக் குறைந்த அளவிற்குச் சுருங்கியிருப்பது ஆறுதலான விஷயம்.
பிராந்தியத் தலைமைத்துவ மதிப்பீட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக ஆசியாவின் 2-வது செல்வாக்கு மிக்க தலைவராக முன்னேறியுள்ளார். ஆனால், ஒரு சின்ன ‘ட்விஸ்ட்’டும் இருக்கிறது. வளைகுடா போரின் போது ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்த சம்பவத்திற்கு இந்தியா மென்மையான எதிர்வினையாற்றியது போன்ற காரணங்களால், மோடியின் உலகளாவிய தலைமைத்துவம் மற்றும் ராஜதந்திர லட்சியம் குறித்த பார்வைகளில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.