இந்திய வம்சாவளிப் பெற்றோருக்கு புளோரிடாவில் பிறந்த பியா தண்டியா (Pia Dandiya), கல்வித்துறையில் தனது பணியைத் தொடங்கி, அமெரிக்காவின் முக்கிய நிர்வாக மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அனுபவம் பெற்றவர். தற்போது தேர்தல் வெற்றியின் மூலம் அமெரிக்க அரசியலில் முக்கியக் கவனத்தைப் பெற்றிருக்கிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள 22-வது நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பியா தண்டியா, குடியரசுக் கட்சி வேட்பாளர் கேசி அஸ்கரைத் (Casey Askar) தோற்கடித்திருக்கிறார். சுமார் 51.9 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள இவர், புளோரிடாவிலிருந்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் தெற்காசிய வம்சாவளிப் பெண் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
ஆசிரியர் பணி முதல் பள்ளி முதல்வர் வரை
புளோரிடாவின் பாம் பீச் கவுண்டியில் (Palm Beach County) குடியேறிய இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர் பியா. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசு நிர்வாகம் தொடர்பான படிப்பை முடித்த இவர், “டீச் ஃபார் அமெரிக்கா’ (Teach for America) திட்டத்தின் மூலம் ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.
நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கணிதம் கற்பித்த பியா, தொடர்ந்து ஹார்லெமில் உள்ள ‘டெமாக்ரசி பிரெப் எண்டூரன்ஸ்’ உயர்நிலைப் பள்ளியின் நிறுவன முதல்வராகத் தனது 28-வது வயதில் பொறுப்பேற்றார். அந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர். அவர்களில் 86 சதவிகிதத்தினர் எளிய பின்னணியைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகை முதல் ஆப்பிள் நிறுவனம் வரை
கல்வித்துறையில் கிடைத்த அனுபவம், அவரை அரசாங்க நிர்வாகப் பொறுப்புகளுக்கும் அழைத்துச் சென்றது.
2020-ம் ஆண்டு ‘ஒயிட் ஹவுஸ் ஃபெலோஷிப்’ (White House Fellowship) திட்டத்தில் தேர்வான பியா, அமெரிக்கக் கல்வித்துறையிலும் உள்நாட்டுக் கொள்கை சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்து, அரசு அமைப்புகளுக்கான தொழில்நுட்பக் கூட்டாண்மைப் பணிகளை மேற்கொண்டார்.
நாடாளுமன்றப் பயணம்
2025-ம் ஆண்டு புளோரிடாவின் 21-வது தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த பியா, தொகுதி மறுவரையறைக்குப் பிறகு 22-வது தொகுதியில் களமிறங்கினார். ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், தற்போது பொதுத்தேர்தலிலும் தன் வெற்றியை உறுதி செய்திருக்கிறார்.
வீட்டு வசதிச் செலவு, வாழ்க்கைச் செலவு உயர்வு, கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகள் ஆகியவை அவரது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக இருந்தன. எளிய வகுப்பறையில் ஆசிரியராகத் தனது பயணத்தைத் தொடங்கிய பியா தண்டியா, இனி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த அனுபவங்களைப் பொதுக் கொள்கைகளாக மாற்றும் புதிய பொறுப்பை ஏற்றிருக்கிறார்.