பள்ளியில் சேர்க்க மறுத்தால் என்ன செய்வது?
“சட்டம் எல்லாம் சரிங்க… ஆனா நடைமுறையில எவ்வளவோ பிரச்சனை வருதே!” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கும் இந்தச் சட்டத்தில் வழிகள் இருக்கின்றன.
“அட்மிஷன் காலம் முடிஞ்சிடுச்சு… இனிமேல் சேர்க்க முடியாது!” என்று பள்ளி சொன்னால், RTE சட்டத்தின் பிரிவு 15-ன்படி, கல்வியாண்டின் தொடக்கத்திலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட காலத்திலோ சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.
அந்தக் காலம் முடிந்துவிட்டது என்ற ஒரே காரணத்தைக் காட்டி, அதற்குப் பிறகு சேர்க்கை கோரும் குழந்தைக்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது. பள்ளியில் இதுவரை சேராத அல்லது தொடக்கக் கல்வியை முடிக்காத ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளையும் அவர்களின் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்து, தேவையான சிறப்புப் பயிற்சி வழங்கிப் படிக்க வைக்க பிரிவு 4 வழிவகை செய்கிறது.

அதேபோல், பள்ளியில் சேர்க்கும்போது சட்டத்தால் தடைசெய்யப்பட்ட நன்கொடைத் தொகையை (Capitation Fee) கேட்பதோ, குழந்தையையோ பெற்றோரையோ சேர்க்கைக்கான தேர்வு அல்லது நேர்காணல் மூலம் சோதிப்பதோ கூடாது எனப் பிரிவு 13 தடை செய்கிறது.
RTE சட்ட பிரிவு
இவற்றில் ஏதேனும் விதிமீறல் நடந்தால், முதலில் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். தீர்வு கிடைக்கவில்லையா? RTE சட்டத்தின் பிரிவு 32-ன்படி, சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகார அமைப்பிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.
அந்த அமைப்பு, சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு, மூன்று மாதங்களுக்குள் புகாரைத் தீர்மானிக்க வேண்டும்.அந்த முடிவில் திருப்தி இல்லாவிட்டால், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடமோ அல்லது உரிய மாற்று அதிகார அமைப்பிடமோ மேல்முறையீடு செய்யலாம்.
கல்வி சலுகை அல்ல… உரிமை!
ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லாமல் வேலை செய்துகொண்டோ, கல்வியைத் தொடர முடியாமலோ இருப்பதைப் பார்த்தால், “அது அவங்க குடும்பப் பிரச்சனைப்பா…” என்று கடந்து போய்விடாதீர்கள்.
குழந்தைக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோரின் கடமை; நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கிடைப்பதை உறுதிசெய்வது அரசின் பொறுப்பு. அந்த உரிமையைப் பாதுகாப்பதில் சமூகமாக நமக்கும் பங்கு இருக்கிறது.
கல்வி என்பது பெற்றோர் குழந்தைக்குத் தரும் சலுகையோ உதவியோ அல்ல… 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி பெறுவது அரசமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை!