அரசு தொடக்க, நடுநிலை, அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை அறிய பள்ளிக் கல்வித்துறையிலிருந்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.
ஆசிரியர்கள் அனைவரின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்படுதல் குறித்து பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் வரப்பெறுவதால், அதனை அறிவதற்குச் சில நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதில், “புதிதாக நேரடி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களின் அனைத்து வகைக் கல்விச் சான்றுகளையும் உரிய கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் / அரசுத் தேர்வுகள் இயக்கக அலுவலருக்கு அனுப்பி உண்மைத் தன்மை அறியப்படுதல் வேண்டும்.
இந்த உண்மைத் தன்மை அறிதல் என்பது பணியில் சேர்ந்த பின்பு தகுதிகாண் பருவம் முடிக்கும் நாளிலேயே அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட வேண்டும்.
பணிபுரிந்து வரும் இதர தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் பயின்று பெற்றுள்ள கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.