ஆசை 1x ; மகிழ்ச்சி 10x ! – 90’ஸ் கிட் தொலைக்காட்சி அனுபவம் |

Spread the love

பூவோடும் பொட்டோடும்‌ அலங்கரிக்கப்பட்ட அந்த புதுப்பெண்ணிற்கு…அடுத்து தூபக்காலும் தயார் நிலையில் இருந்தது! பட்டாபிஷேக நேரத்தில் டி.வி. யில் வரும் இராமர்-சீதைக்கு காட்ட வேண்டும் என்று சூடம்,  தீப்பெட்டியுடன் பாட்டி‌!  

சரியாக காலை பத்து மணி. இராகு காலம், எமகண்டம் எல்லாம் பட்டாபிஷேக விழாவால் தள்ளுபடி ஆனது! டி.வி‌. போட்ட விநாடி, “ஹேஹஹஹ…” என்று அறை அதிரச் சத்தம்! 

இராமாயணம் தொடங்கியதும், பாட்டிக்கு  ஒவ்வொரு வரியாய் மொழிபெயர்த்து சொல்லிக்கொண்டிருந்தேன் நான்.‌ பெருமிதம் தாளாது, “என் பேத்தி ஹிந்தி படிச்சிருக்கா. அப்டி அழகா சொல்றா” என்ற உடனிருந்த மத்த‌ பாட்டிகளிடம் அகமகிழ்ந்து கூறினாள்.

பட்டாபிஷேகம் ஒளிப்பரப்பான போது, அந்த அறையைக் கோயிலாக மாற்றினார்கள் பாட்டியும் அம்மாவும்! பூவைத் தூவி, மணி அடித்து,  தீபாராதனை காட்டி “ஜெய் ‌ஸ்ரீ ராம்!” என உரக்கக் கூறி கண்ணத்தில் போட்டுக் கொண்டதோடு நிற்காமல், அம்மா அடுப்பங்கறை சென்று அனைவருக்கும் செய்து வைத்திருந்த பால் பாயாசத்தைக் கொண்டு வந்து டி.வி. முன்னாடி வைத்து படைத்தாளே பார்க்கணும்!! 

இத்துடன் ஃபளாஷ் பேக் இனிதே முடிந்தது! நம்ம பழைய கதையைத் தொடருவோமா? 

இப்படி நன்றாக ஓடிக்கொண்டிருந்த எங்களின் புது கலர் டி.வி. அவ்வப்போது பரிதவிக்கத் தொடங்கியது. பெரும்பாலும் ஆண்டெனா திரும்பிக் கொள்ளும் காரணம்தான்…

ஆண்டெனா கம்பியை  மீண்டும் சரியான நிலைக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்லவே! அந்த முக்கியப்‌ பணியாற்ற ஒரு கூட்டு முயற்சி அவசியம் தேவைப்படுகிறது. 

காலையில் அம்மா சட்டியில் இருவருக்கும் கலந்து வைத்திருந்த ரஸ்னாவை, இரண்டு பூப் போட்ட கண்ணாடிக் கோப்பையில் ஊற்றும் போது இரண்டிற்கும் போக ஒரு வாய் மீதம் இருந்தது. தியாகித் தாயிடம், பாசத்தைக் காட்டிலும், சண்டையைத் தவிர்க்கும் யுக்தியாய், “அம்மா, அத நீயே குடிச்சுரு”, என்றேன்.  

“ஐ லவ் யூ ரஸ்னா!” என்று ரஸ்னா விளம்பரத்தில் வரும் க்யூட் பேபியின் பன்ச் லைனை  சொல்லிவிட்டுக் குடிப்பது என் வழக்கம். சொல்லி முடிப்பதற்குள், அண்ணன் தன் வேலையைக் காண்பித்து விட்டான். அந்த எக்ஸ்ட்ரா ஒரு வாயை, ‘டபக்’ என அவன் வாயில் ஊற்றிக் ‘மடக் மடக்’ கென குடித்துவிட்டான். இந்த பெரிய அசம்பாவிதத்தில்(!) தொடங்கிய சண்டை, நாள் முழுக்கத் தொடர்ந்தது. 

இரவு ‘ஒளியும் ஒலியும்’ பார்ப்பதற்காக, டி.வி. யை ஆன் செய்த போது, ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியே இன்னும்  முடியவில்லை என்று உணர்ந்தோம். சற்று நேரத்தில் டி.வி. யில் கருப்பு வெள்ளை நிறத்தில் அலை அலையாய் வந்து கொண்டிருந்தது.  பொதுவாக ‘தடங்கலுக்கு வருந்துகிறோம் (சாரி ஃபார் தி இன்டரப்ஷன்)  போன்ற வாசகங்கள்  காண்பிக்கப்படும் போது, திரையில் வானவில் நிறங்கள்  நேர்கோடுகளாய்த் தெரியும். அது தூர்தர்ஷன் தரப்பில் கேட்கப்படும் மன்னிப்பு. ஆனால் இந்த கருப்பு வெள்ளை வந்தால் எங்கள் தொலைக்காட்சியிலோ அல்லது மேலே ஆண்டெனாவிலோ ஏதோ பிரச்சனை என்பதையே சில நாட்களுக்குப் பிறகு தான் புரிந்து கொண்டோம். 

காலையிலிருந்து பேசிக்கொள்ளாமலிருந்த அண்ணனும் நானும் மாலை ஆண்டனாவால் இணைய வேண்டும் என்பது விதி. வழக்கம்போல் மானத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டு, “நீ கீழ இருந்து பாத்து சொல்லு.  நா மேல போய் திருப்புறேன்”, என்று சொல்லிக் கொண்டே மாடி ஏற ஓடினான் அண்ணன். 

டி.வி. ரூமில் இருந்து எப்படி‌ சிக்னல் கிடைக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு, நடுவாசலுக்கு நான் ஓடிச் செல்ல வேண்டும்.  மொட்டை மாடியில் பாராபெட் வாலில் ஏறி நின்றோ, அல்லது குரங்கு விரட்ட வைத்திருக்கும் குச்சியைக் கொண்டோ லாவகமாக ஆண்டெனாவைத் திருப்பும் அண்ணனுக்கு நடுவாசலிலிருந்தே உரக்க சிக்னல் கொடுக்க வேண்டும்.‌ அதைக் கேட்டு அவன் திருப்பத் திருப்ப, மீண்டும் டி.வி. அறைக்கு ஓடு வந்து பார்த்துவிட்டு மீண்டும் சென்று அவனுக்கு அப்டேட்‌ செய்ய வேண்டும். 

“ஒன்னுமே தெரில” என்பதில் துவங்கி, “ஆ…வந்துட்டு வந்துட்டு போகுது” எனத் தொடர்ந்து, “கொஞ்சம் லைட்டா‌ முன்னாடி திருப்புன மாதிரியே திருப்பு” என முன்னேறி…இறுதியில் “ஆஆஆ இப்போ நல்லா தெரியுதுடா. சீக்கிரம் வா. ‘புது வசந்தம்’ பாட்டு வந்திருச்சு” என வசந்தம் திரும்பும் எங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும்! 

இப்போது தட்டினால் டி.வி. யில் ஓடிடியில், யூட்யூபில் எந்தப் படத்தை வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த மொழியில் வேண்டுமானாலும் பார்க்க முடிகிறது! ஆனால், ‘ரீஜினல் லேங்குவேஜ் ஃபிலிம்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிராந்திய மொழித் திரைப்படம் தான்  அப்போது எங்களுக்கு 

கிடைக்கும் அரிய வரம்! 

ஒவ்வொரு வாரமும், வியாழன் விகடனுக்கும், வெள்ளி ஒளியும் ஒலியுமிற்கும், ஞாயிறு காலை இராமாயணத்திற்கும், ஞாயிறு மாலை தமிழ்த்திரைப்படத்திற்கும் காத்திருந்த கூட்டம் நாங்கள்! 

ஒளியும் ஒலியுமாவது ஓரளவிற்கு புதுப்பாடல்களை பல விளம்பரங்களுக்கு இடையில் காட்டும். ஆனால் ஞாயிறு திரைப்படங்கள் மிகப் பழமையானதாக இருக்கும்! பெரும்பாலும் கருப்பு-வெள்ளைப் படம் தான்! 

தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம், ப்ராந்திய மொழித் திரைப்படம் என்ற‌ பெயரில், இந்திய மாநில மொழிகளில் தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் அல்லது சிறந்த திரைப்படங்கள்  ஒளிபரப்பாகும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மொழி. ஆகவே, இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை தமிழ்த் திரைப்படம் ஒளிபரப்பாவதற்கான  வாய்ப்பு இருக்கும்!

அந்த திரைப்படம் என்னவாக இருக்கும்?! என்று நாங்கள் மண்டையை உடைத்துக் கொள்வதிலும், எதிர்பார்த்துக் காத்திருப்பதிலும்  ஒளிந்திருந்தது அவ்வளவு மகிழ்ச்சி! எல்லாம் கைக்கு சுலபமாக எட்டுவதால், ‘தேடல்’ என்ற பெரும் ஸ்வாரஸ்யத்தை இழந்து நிற்கிறது… இன்றைய தலைமுறை! 

அப்படி ஒரு முறை,  விஜயகாந்த் நடித்து 1980 யில் வெளிவந்த “தூரத்து இடி முழக்கம்” என்ற திரைப்படம் ஒளிபரப்பானது. 1981 ஆம் ஆண்டு ‘இந்தியன் பனோரமா’வில் அகில உலகத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான 21 படங்களில் இப்படமும் ஒன்று என்பதும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டது! 

தியம் 1:30 மணிக்கு,  நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன்‌ பெருங்கூட்டமாய் காத்திருந்தோம்.  

அந்த சாதாரண  திரைப்படத்தை 2.5 மணித்துளிகள் போராடிப் பார்த்த நினைவுகள் இன்றும் என் மனதை விட்டகலவில்லை. 

மே மாத மதிய வெயிலையும் பொருட்படுத்தாது, 

நான்கு முறை ஆண்டெனாவைத் திருப்பி, இரண்டு முறை கரண்ட் கட் ஆகி, கரண்ட் படம் முடிவதற்குள் வருமா? வருமா? எனத் தவமிருந்து, 

ஒன்றும் புரியாவிட்டாலும் ரசித்து, சிரித்து மகிழ்ந்திருந்தோம்!

எங்களுக்கு ஏங்கிக் காத்திருப்பதில் இருந்த சுகமும், சின்னச் சின்ன விஷயங்களில் கிடைத்த மகிழ்ச்சியும், அதை அடைந்த நொடி கிட்டிய பேரானந்தமும்  மற்றற்றது. 

ஏகமாய் இருந்தும், எதைத் தேர்வு செய்வதென்று திணறி, எல்லாம் அனுபவித்தும், எதிலும் திருப்தி அடையாத இந்தத் தலைமுறையினரைப் பார்த்தால் வியப்பாகத் தான் இருக்கிறது எங்களுக்கு! 

– இப்படிக்கு,

ப்ளெஸ்டு வித் த லீஸ்ட்‘ (Blessed with the least)

– 90-ஸ் கிட்

– அலமேலு இராமநாதன், 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *