ஆட்சிய கவிழ்க்க நினச்சா திமுக அழியுமா? – பகீர் கிளப்பிய Journalist Mani..! – Kumudam

Spread the love

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பத்திரிக்கையாளர் மணி, விஜயை கொள்கை, கோட்பாடு மற்றும் அரசியல் செயல்பாடுகளின் அடிப்படையில் எதிர்கொள்வதைவிட, தனிப்பட்ட முறையில் தாக்குவது திமுகவுக்கே பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

விஜயை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத சூழலில்தான் தனிமனித தாக்குதல்கள் அதிகரிப்பதாக மணி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது அரசியல் கண்ணியத்துக்கு எதிரானது என்றும், சாதாரணமாக உழைக்கும் ஒரு பெண்ணுக்கும் பிரதமர் அல்லது முதலமைச்சருக்கு இணையான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிரியை பலவீனப்படுத்துவதற்காக தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டால், அதனால் அவருக்கு மக்கள் மத்தியில் பரிதாபமும் ஆதரவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மணி குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களை திமுக எதிர்த்த வரலாற்றை சுட்டிக்காட்டிய அவர், திமுகவின் கடுமையான எதிர்ப்பு சில நேரங்களில் எதிரிகளின் அரசியல் வளர்ச்சிக்கே காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயை தொடர்ந்து தாக்குவது அவரை மேலும் மக்கள் கவனத்துக்குள் கொண்டு வந்து, அவரது அரசியல் வளர்ச்சியை வேகப்படுத்தும் ‘பூமராங்’ விளைவை ஏற்படுத்தலாம் என்றும் மணி கூறியுள்ளார். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவதற்குப் பதிலாக ஆட்சியைக் கவிழ்ப்பது குறித்தே பேசினால், அதுவே திமுகவுக்கு எதிராக திரும்பக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, சர்ச்சைக்குரிய பேச்சுக்காக கைது செய்து உதயநிதியை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நடவடிக்கையையும் மணி விமர்சித்துள்ளார். அந்தப் பேச்சு தவறானதாக இருந்தாலும், அது ஏற்கெனவே டிஜிட்டல் தளங்களில் மக்களிடம் சென்றுவிட்ட நிலையில், கைது நடவடிக்கை தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கை சம்பந்தப்பட்ட நபருக்கு ‘தியாகி’ என்ற பிம்பத்தை உருவாக்கிவிடும் என்றும், திறந்தவெளியில் கிடைக்கும் ஆதாரங்கள் இருக்கும் நிலையில் விசாரணைக் கைது தேவையற்றது என்றும் மணி குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் உரிய பிரச்சனை அல்ல என்றும், பல்வேறு கட்சிகளிலும் இதுபோன்ற அரசியல் மொழி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் விமர்சனம் கொள்கை மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தனிப்பட்ட தாக்குதல்களாக மாறக்கூடாது என்பதே அவரது கருத்தாக உள்ளது.

சமூக வலைதளங்களின் காலகட்டத்தில் அரசியல் தலைவர்களின் ஒவ்வொரு பேச்சும் உடனடியாக மக்களை சென்றடைவதால், ஆபாசம் மற்றும் தனிமனித தாக்குதல்களை மக்கள் நீண்ட காலம் நினைவில் வைத்திருப்பார்கள் என்றும் மணி எச்சரித்துள்ளார். இதனால், பின்னர் உண்மையான மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசும்போது, இதுபோன்ற பேச்சுகளை பேசியவர்களின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *