International
oi-Nantha Kumar R
மாஸ்கோ: ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி உள்பட பல்வேறு கடல்வழிப்பாதைகளில் ஏற்படும் பதற்றம் காரணமாக நம் நாட்டுக்கான கியாஸ் மற்றும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையை சரிசெய்யும் வகையில் இந்தியா – ரஷ்யா இடையே நேரடி ரயில் போக்குவரத்தை தொடங்கும் திட்டத்தை ரஷ்யா முன்மொழிந்துள்ளது.

நம் நாடும், ரஷ்யாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. ரஷ்யாவில் கச்சா எண்ணெய் வளம் மற்றும் கியாஸ் தயாரிப்பு அதிகளவில் நடக்கிறது. நம் நாட்டை எடுத்த கொண்டால் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா – ஈரான் மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் அரபு நாடுகளிடம் இருந்து நம் நாட்டுக்கு வரும் கச்சா எண்ணெய், கியாஸ் சப்ளை பாதிக்கப்பட்டது.
இதனால் மீண்டும் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை வாங்கியது. ஜூலை மாதத்தில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி நாள் ஒன்றுக்கு சுமார் 4.96 – 5 மில்லியன் பேரல்களாக இருந்தது. இதில் ரஷ்யாவின் பங்கு 55% முதல் 55.5% வரை ஆகும். அதாவது நம் நாட்டின் பயன்பாட்டில் உள்ள கச்சா எண்ணெய்யில் பாதிக்கு மேல் ரஷ்யா வழங்கி வருகிறது.
இதுதவிர போரின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. இதனால் ரஷ்யா கச்சா எண்ணெய் நம் நாட்டில் சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசலாக மீண்டும் அங்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் கடல் வழிப்பாதை வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கடல்வழிப்பாதைக்கு அப்பாற்பட்டு இந்தியா – ரஷ்யா இடையே நிலம் வழியாகவும் வர்த்தகதற்காக வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதனை ரஷ்ய துணை பிரதமர் மராட் குஸ்னுல்லின் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர், ”ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கான இணைப்பை உறுதி செய்யும் எந்தவொரு வழித்தடத்தையும் நாங்கள் ஏற்கிறோம். ரஷ்யாவில் இருந்து இந்திய பெருங்கடலுக்கான ரயில் இணைப்பு குறித்து ஆராயப்பட வேண்டி உள்ளது.
போஸ்பரஸ் ஜலசந்தி (துருக்கி கட்டுப்பாட்டில் உள்ளது)மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (ஈரான் கட்டுப்பாட்டில் உள்ளது.) உள்ளிட்ட கடல்வழிப்பாதைகளில் நிலவும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மாற்று வழிகள் தேவையாக உள்ளது. இதனால் துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு ரயில் போக்குவரத்துக்கான பாதை அமைப்பது பற்றி ஆராய வேண்டும்” என்றார்.
இதன்மூலம் ரஷ்யா – இந்தியா இடையே ரயில் போக்குவரத்தை தொடங்குவது பற்றிய முன்னெடுப்பை ரஷ்யா தொடங்கி உள்ளது. அதேவேளையில் நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. ரஷ்யா அறிவித்துள்ள இந்த ரயில் வழிப்பாதை பாகிஸ்தானையும் உள்ளடக்கி உள்ளது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. இதனால் இது சாத்தியமா? என்று உங்களுக்கு கேள்வி எழலாம். ஆனால் இது சாத்தியமாக கூட வாய்ப்புள்ளது.
அதாவது ரஷ்யாவின் நெருங்கி நட்பு நாடாக நம் நாடும், ரஷ்யாவும் உள்ளது. இருநாடுகளும் தொடர்ந்து ரஷ்யாவிடம் அதிகமான கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றன. அதேபோல் சீனாவிற்கும், பாகிஸ்தான் நல்ல உறவில் உள்ளன. இதனால் சீனாவை வைத்து பாகிஸ்தானை சமாதானம் செய்ய ரஷ்யா முன்வரலாம். அதேபோல் நம் நாட்டை ரஷ்யா சமாதானம் செய்யலாம்.
அதுமட்டுமின்றி இந்தியாவுக்கான ரஷ்ய ரயில் பாதை திட்டத்திற்கு சீனாவும் கூட ஆதரவு தெரிவிக்கலாம். ஏனென்றால் இது ரஷ்யா – சீனா இடையேயும் ரயில் பாதையை உருவாக்க வாய்ப்புள்ளது. அதாவது, சீனா-பாகிஸ்தான் CPEC எனும் பொருளாதார வழித்தடம் உள்ளது. இப்போது ரஷ்யா, இந்தியாவை மையப்படுத்தி பாகிஸ்தானுக்கு ரயில் வழித்தடத்தை கொண்டு வந்தால் அதனை சீனா – பாகிஸ்தான் CPEC பொருளாதார வழித்தடத்துடன் இணைக்கலாம்.
ஏனென்றால் தற்போது நிலவும் உலக நாடுகள் இடையேயான மோதல் காரணமாக கடல்வழித்தடங்கள் பாதிக்கப்படுவது போல் எதிர்காலத்திலும் மத்திய கிழக்கில் பதற்றம் வரலாம். இதனால் அரபு நாடுகளில் இருந்து கியாஸ், கச்சா எண்ணெய் சப்ளை இன்றி இந்தியாவும், சீனாவும் தான் பாதிக்கப்படும். இதனால் இந்தியா, சீனாவும் கூட ரஷ்யா உடனான ரயில் வழித்தடத்துக்கு ஆர்வம் காட்டலாம் என்பதால் இந்த திட்டம் கூட சாத்தியமாக வாய்ப்புள்ளது என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.