பலன் தரும் பரிகாரம்! – வி.ராம்ஜி
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது தேகத்துக்கு ஆரோக்கியம். நவக்கிரகங்களில் சூரியனும் ஒரு கிரகம். சூரிய கிரகத்தையும் கடவுளாகத்தான் வணங்கி வழிபடுகிறோம். சூரிய பகவானுக்கு உரிய மந்திரங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்வோம். ஆதித்ய ஹ்ருத்யம் பாராயணம் செய்து வேண்டிக்கொண்டால், கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது உறுதி!
உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமானவர் சூரிய பகவான். எல்லா உயிர்களுக்கும் சக்தியை வழங்குபவர். நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, சூரியனாக, சூரிய பகவானாக அமைந்திருக்கிறார். சூரியனை வழிபடும் முறையை செளமாரம் என்று விளக்குகிறது சாஸ்திரம். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவாலயத்தில் இருக்கும் துர்கையை, சிவ துர்கை என்கிறோம்.
பெருமாள் கோயிலில் இருக்கும் துர்கையை விஷ்ணு துர்கை என்கிறோம். அதேபோல் சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைக்கிறது புராணம். இரண்டு விதமாக சொல்லப்பட்டாலும் ஒரேயொரு சூரிய பகவான். அவரை நாம் வணங்கினால், அளப்பரிய பலன்கள் உண்டு என்பது உறுதி!
சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார். ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றார் என்கிறது சூரிய புராணம். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பனிரெண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் காலத்தைக் கொண்டுதான் தமிழ் மாதப்பிறப்பு நிகழ்கிறது.
சூரியன் பச்சை நிறமுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார் என்கிறது சூரிய புராணம். இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன் எனத் தெரிவிக்கிறது புராணம். இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன்! அருணன் என்றாலும் சூரியன் என்றே அர்த்தம். பாஸ்கரன் என்றாலும் சூரியன் என்றே பொருள்!
சூரியனின் ரதம் பொன் மயமானது என வர்ணிக்கிறது சூர்ய புராணம். அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும் மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகள் என்பவை முக்காலத்தையும் குறிக்கின்றன. சூரிய சக்கரத்திலுள்ள ஆறு கட்டைகளும், ஆறு ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயனம் மற்றும் தட்சிணாயனம் என்று காலங்களைக் குறிக்கிறது. அயனம் என்றால் பாதை என்று அர்த்தம். சூரிய பகவான், தன்னுடைய தேரில் நான்கு பட்டணங்களைச் சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’. இது சூரியஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், தினமும் சூரியனை வணங்கிவிட்டுதான், நம் அன்றாட வேலைகளைச் செய்யச் சொல்லி, வழிபாட்டு முறைகள் எடுத்துரைக்கின்றன. சூரியன் உதிப்பதற்கு முன்பே நாம் எழுந்துவிடவேண்டும், தூங்கக்கூடாது என்று சொல்வதற்குப் பின்னே, சூரியோதய வெளிச்சமும் சூரியக் கதிரொளிகளும் நம் மீது விழவேண்டும்; நம் நாடிகளும் நரம்புகளும் உற்சாகம் பெற்று, நம் புத்தியை உசுப்பிவிடும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்றெல்லாம் சொல்லிவைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.
சூரிய பகவானை தினமும் வணங்க வேண்டும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால், சூரிய பகவானின் அருளைப் பெறலாம். அதேபோல், காவிரி முதலான புண்ணிய நதிகளில் அதிகாலையில் நீராடிவிட்டு, நதியில் இருந்தபடியோ நதிக்கரையில் இருந்துகொண்டோ சூரிய நமஸ்காரம் செய்வது சகல சந்தோஷங்களையும் தந்தருளும்; கிரக தோஷங்களில் இருந்து விடுபடச் செய்யும் என்கிறார் வேதிக் விஜய் சாஸ்திரிகள்!
ஞாயிற்றுக்கிழமை முதலான நாட்களில், அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து, ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து வேண்டிக்கொண்டால், முன் ஜென்ம பாவங்கள் விலகும். மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாக, நவக்கிரகங்களைச் சுற்றி வந்து வேண்டிக்கொள்வது, வாழ்வில் உள்ள தடைகளை நீக்கும் என்பது உறுதி! ஆதித்யன் என்றாலும் சூரிய பகவானையே குறிக்கும்!
ஆயிரம் கரங்கள் நீட்டும் ஆதவனை வழிபடுவோம்; ஆதவன் என்பதும் சூரியனே..!
.
