கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் ஹரியானாவைச் சேர்ந்த ஒரு வாலிபரை டேட்டிங் ஆப் மூலம் காதலித்து வந்தார். ஹரியானாவில் உள்ள பானிபட்டில் வசிக்கும் நிதினுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு டேட்டிங் செயலி மூலம் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் முதலில் அறிமுகம் ஏற்பட்டது.
இவர்களது பேச்சுக்கள் படிப்படியாக நெருங்கிய நட்பாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனர். இதையடுத்து அந்தப் பெண் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். 11 ஆம் தேதி டெல்லி வந்தடைந்தார்.
டெல்லி விமான நிலையத்தில் அவரை நிதின் வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர் அவரை ராஜஸ்தானில் உள்ள நீம்ரானாவிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்கள் அவரது மாமாவுக்குச் சொந்தமான ஒரு குடியிருப்பில் தங்கினர்.

அந்தப் பெண் நிதினுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். இந்தக் காலகட்டத்தில், திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்தப் பெண்ணின் வயது 61 என்று தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிதின் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்தார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண் கனடா தூதரகத்தைத் தொடர்பு கொண்டு இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
கனடா தூதரகம் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண் மற்றும் நிதின் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீசார் நிதினை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர்.
நிதின் ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்தவர் என்றும் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வந்தும் திருமணம் செய்ய முடியாத நிலையில் கனடா பெண் சோதனைக்கு ஆளாகி இருக்கிறார்.