`ஆமா, பண்ணையார் தான்; நான் ஒன்றும் உழைத்து முன்னுக்கு வந்தவன் இல்லை.!" – கார்த்தி சிதம்பரம் பதில்

Spread the love

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டபின், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

`மக்களுடன் இணைய வேண்டும்’

தமிழக முதல்வர் விஜய்க்காகத்தான் மக்கள் ஓட்டளித்துள்ளனர்.

மக்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அதனைக் காப்பாற்றிக்கொள்ள அவர் முயற்சி செய்ய வேண்டும். இன்னும் அவர் தன்னை மக்களுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சம்பவத்துக்கும் முதல்வர் பேச வேண்டும். தகவல் தொடர்பு இல்லாததால்தான் இவ்வளவு பெரிய சிக்கல்களை இந்த அரசு சந்தித்து வருகிறது.

கார்த்தி சிதம்பரம்

இப்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அதனால் இந்த ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

டிவி ஷோவுக்காக கைது

75 சதவீத கைதுகள் டிவி ஷோவுக்காகத்தான் நடத்தப்படுகின்றன. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டிய அளவுக்கான வழக்கு போல இது இல்லை. அதே வேளையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டரின் உடைமைக்கும், உயிருக்கும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வால் ஆபத்து இருக்கிறது என்றால் அவரைக் கைது செய்யலாம். உதயநிதியையும் கைது செய்து அழைத்துச் சென்றதும் தவறுதான்.

பண்ணையார், பெருமுதலாளிதான்..!

திருச்சி எம்.பி. துரை.வைகோ என்னை ‘பண்ணையார்’ என்று கூறியது எனக்குத் தவறாகவோ, பச்சையாகவோ, கெட்ட வார்த்தையாகவோ தெரியவில்லை.

சிலர் என்னைப் ‘பெருமுதலாளி’ என்றும் சொல்வார்கள். நான் ரொம்பப் பெரிய முதலாளிதான்; இல்லை என்று சொல்லவில்லை. என்னை ‘மகாராஜா’ எனச் சொல்லவில்லையே என்றுதான் ஏமாற்றமடைகிறேன், வருத்தப்படுகிறேன்.

நான் ஒன்றும் கஷ்டப்பட்டு, சுயமாக உழைத்து வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவன் கிடையாது. எனது குடும்பம் செல்வந்தர் குடும்பம். எங்கள் அப்பா, அதற்கு முன் ஐயா (தாத்தா), அதற்கு முன் பாட்டன் என எல்லோருமே செல்வந்தர்கள்.

அந்த வழியில்தான் எனக்கு வாழ்க்கையே அமைந்துள்ளது. அதனால் பண்ணையார் என்ற வார்த்தை எனக்குத் தவறாகத் தெரியவில்லை.”

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *