ஏற்ற இறக்கத்தில் தங்கத்தின் விலை… இன்று என்ன நிலவரம்? – Kumudam

Spread the love

உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, கடந்த சில வாரங்களாகச் சரிவைச் சந்தித்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் விலை திடீரென வேகமாகச் சரிந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழே சென்றது. இந்த மாதத்தின் மத்தியில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் தங்கம் ரூ.91,728-க்கும், ஒரு கிராம் ரூ.11,716-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த எதிர்பாராத விலைச் சரிவு நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை ஏற்பாடு செய்திருந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள், நகைக்கடைகளிலும் குவிந்தனர். இந்த நிலையில், தங்கத்தின் விலை மேலும் குறையும் என்றும், 90 ஆயிரத்திற்குக் கீழே செல்லும் என்றும் கூறப்பட்டது. ஆனால், தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது.

கடந்த 23-ஆம் தேதி முதல் படிப்படியாக உயர்ந்த தங்கத்தின் விலை, சவரனுக்கு சுமார் ரூ.2,000 வரை அதிகரித்தது.இதற்கு நேர்மாறாகத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாகச் சரிந்தது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 960 ரூபாய் அதிகரித்து, 92,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 11,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1.65 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தங்கம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், மக்களின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.சுபகாரியங்கள், நடுத்தரக் குடும்பத்தினரின் சேமிப்பு, அவசரத் தேவைகளுக்குக் கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்குத் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால், தங்கத்தின் விலை நிலவரம் நாள்தோறும் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில், வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயருமா அல்லது சரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

என்றாலும், தங்கத்தின் விலையில் சிறிய அளவிலேயே மாற்றம் இருக்கும் என்றும், பழைய உச்சத்திற்குச் செல்ல வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *