ஆம்ஸ்ட்ராங்கிற்காக பழி தீர்க்க சதி திட்டமா?.. சிக்கிய முக்கிய ரவுடி.! – Kumudam

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி.நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்ற ஒற்றைக்கண் ஜெயபால் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 13 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கிலும் அவர் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் கருதப்படுகிறார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜெயபால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்களை பழி தீர்க்கும் நோக்கில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என்ற தகவல் உளவுத் துறைக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரவுடிகள் ஒழிப்பு தனிப்படை போலீசார் ஜெயபாலை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சில ரவுடிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அரக்கோணத்தில் வைத்து ஜெயபாலை போலீசார் கைது செய்தனர்.

கைதின் போது அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் ஒப்படைத்த போலீசார், கஞ்சா வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

தொடர்ந்து, ரவுடிகளுடனான தொடர்பு மற்றும் சதித் திட்டம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள் நெருங்கி வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை வட சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *